லக்னோ: உ.பி.யின் பரேலியை சேர்ந்தவர் பிரதீப் சக்சேனா. இவர் கடந்த 1987-ல் தனது சகோதரரை கொன்றதாக கைது செய்யப்பட்டார். 1989-ல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு பரோலில் சென்ற இவர், போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பினார்.
இந்நிலையில் பிரதீப்பை 4 வாரங்களுக்குள் கைது செய்ய வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 16-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து பிரதீப்பை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர்.
பரேலியில் இப்போதும் வசித்து வரும் பிரதீப்பின் மற்றொரு சகோதரர் சுரேஷிடம் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் மொராதாபாத்தில் அப்துல் ரஹீம் என்ற பெயரில் வாழ்ந்து வந்த பிரதீப்பை கைது செய்தனர். அவரை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.