புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், 'சேவா தீர்த்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ், டெல்லியில் மத்திய அரசின் துறைகளுக்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரதமர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்கள் ஆகியவை புதிய கட்டிடங்களுக்குச் செல்ல உள்ளன.
இந்நிலையில், அங்குள்ள புதிய பிரதமர் அலுவலகத்துக்கு சேவா தீர்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேவைகளை வழங்கும் புனித இடம் என்ற பொருள்படும்படி இந்த பெயர் வைக்கப்பட உள்ளது.
குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்வாகம் என்பதை உணர்த்தும் வகையிலும், பிரதமர் அலுவலகம் என்பது அதிகார மையம் அல்ல, அது புனித சேவைக்கான மையம் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பெயர் மாற்றத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, டெல்லியின் ராஜ் பத் என்பதை கர்த்தவ்ய பத் (கடமைப் பாதை) என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், சமீபத்தில் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் இல்லங்களுக்கான பெயர்கள் லோக் பவன் மற்றும் லோக் நிவாஸ் ( மக்கள் பவன் மற்றும் மக்கள் நிவாஸ்) என பெயர் மாற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட உள்ளது. "இந்திய ஜனநாயகம், அதிகாரத்தைவிட பொறுப்பையும், அந்தஸ்தைவிட சேவையையும் தேர்வு செய்து வருகிறது. இதை உணர்த்துவதே இதன் நோக்கம்" என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது பிரதமர் அலுவலகம் டெல்லியின் சவுத் பிளாக்கில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.