பிரதமர் மோடி.
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவதற்கு ஆதரவு கோரி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இந்த முயற்சி, எந்தவொரு கட்சிக்கும் அல்லது தனிநபருக்கும் அப்பாற்பட்ட தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், “விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அதன் உண்மையான உணர்வோடு நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள், மகளிர் இடஒதுக்கீடு மசோதா அடிப்படையில் நடத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.
இம்மசோதாவிற்கு ஆதரவளிப்பதன் மூலம், பெண்கள் மற்றும் வருங்காலத் தலைமுறையினரின் மீதுள்ள பொறுப்புணர்வை அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவது இந்திய அரசியலில் பெண்களுக்குக் கிடைத்த ஒரு மகத்தான சாதனையாக அமையும்.
நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்தலைப்பு குறித்து அவையில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இது எந்தவொரு கட்சிக்கும் அல்லது தனிநபருக்கும் அப்பாற்பட்ட ஒரு தருணமாகும்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் நீண்ட காலமாகவே வெளிப்படுத்தி வருவதால், அந்த லட்சியத்தை நனவாக்குவதற்கு இதுவே மிகச் சரியான நேரமாகும். இது நாட்டின் பெண் சக்திக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் சாதனையாகத் திகழும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “பெண்கள் முன்னேறுவதற்கும், முடிவெடுப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தலைமை தாங்குவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்போது மட்டுமே எந்தவொரு சமூகமும் வளர்ச்சி அடையும். வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குக் கனவை நனவாக்குவதற்கு, இந்தப் பயணத்தில் பெண்கள் இன்னும் அதிக அளவிலும், மிகத் தீவிரமாகவும் பங்காற்றுவது மிகவும் அவசியமாகும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத் திருத்தத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவானது, நமது நாட்டின் பெண்களுக்கு ஆற்றவேண்டிய ஒரு முக்கியப் பொறுப்பை நிறைவேற்றுவதாக அமையும். நமது மகத்தான ஜனநாயக மரபுகளை நாம் மேலும் வலுப்படுத்தி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார்.