இந்தியா

கவுஹாத்தியில் உள்ள அசாம் போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

வெற்றி மயிலோன்

கவுஹாத்தி: பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) கவுஹாத்தியில் உள்ள 'சுவாஹித் ஸ்மராக் ஷேத்ரா' நினைவிடத்தில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான இயக்கமான அசாம் போராட்டத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அசாமில் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக ஆறு ஆண்டு காலம் நடந்தப் போராட்டம் 1985-ல் முடிவடைந்தது. இந்த போராட்டத்தில் உயிர்நீத்த 860 தியாகிகளின் நினைவாக கவுஹாத்தியில் நினைவிடம் கட்டப்பட்டது.

அசாம் போராட்டத்தின் முதல் தியாகியான கர்கேஷ்வர் தாலுக்தாரின் நினைவு தினமான கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி இந்த நினைவிடம் திறக்கப்பட்டது. தாலுக்தார் 1979ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று உயிரிழந்தார்.

இந்த நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கின் முன் பிரதமர் மோடி இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் சுற்றிப் பார்த்தார். மேலும், தியாகிகளின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டுள்ள ஒரு காட்சிக்கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.

அசாம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் அசாம் அமைச்சர் அதுல் போரா ஆகியோர் பிரதமருடன் இருந்தனர்.

பிரதமர் மோடி தியாகிகளைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டதாகவும், முதல்வர் அவருக்கு விளக்கமளித்ததாகவும் அமைச்சர் போரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுபற்றி பேசிய அவர், “இது அசாம் மாநிலத்திற்கு ஒரு மறக்க முடியாத நாள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​ஆறு ஆண்டு கால இயக்கத்தின் போது தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

தாலுக்தாரின் மார்பளவு சிலைக்கு பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரதமரின் இந்த வருகைக்குப் பிறகு அசாம் போராட்டத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிய முற்படும். எந்தப் பிரதமரும் இதுபோல அசாம் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியதில்லை. இதற்காக நாங்கள் பிரதமர் மோடிக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று அவர் கூறினார்.

ரூ.170 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் நீர்நிலைகள், ஒரு கலையரங்கம், ஒரு வழிபாட்டு கூடம், ஒரு சைக்கிள் ஓட்டும் தடம் மற்றும் அசாம் போராட்டம் மற்றும் மாநிலத்தின் வரலாற்றின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்காட்டும் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி அரங்கம் போன்ற வசதிகள் உள்ளன.

வங்கதேச ஊடுருவல்காரர்களின் சட்டவிரோத குடியேற்றம் பிரச்சினை அசாம் அரசியலின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் ஒன்றாகும். ஆறு ஆண்டுகள் நீடித்த சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT