பாட்னா: பிஹார் மாநிலத்தில் வைஷாலியையும் பாட்னாவையும் இணைக்கும் வகையில், கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 9.76 கி.மீ நீளமுள்ள, ஆறு வழித்தடங்களைக் கொண்ட 'நிதிஷ் சேது' பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) பிஹாரில் கங்கை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 9.76 கி.மீ நீளமும், ஆறு வழித்தடங்களும் கொண்ட 'நிதிஷ் சேது' பாலத்தைத் திறந்து வைத்தார். இந்தப் பாலம் வைஷாலி மாவட்டத்தின் பிதுபூர் பகுதியையும், பாட்னா புறநகர்ப் பகுதியான கச்சி தர்காவையும் இணைக்கிறது.
இந்தப் பாலத்துக்கு பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு, பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
முன்னதாக, பாட்னா விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை, நிதிஷ் குமார் நேரில் வரவேற்றார். அப்போது இருவரும் அன்புடன் கட்டியணைத்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பின் புகைப்படத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள பிரதமர், ‘பாட்னா விமான நிலையத்தில் நிதிஷ் குமாரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று பிஹாரில் சாலை இணைப்பு, எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, நீர் வளங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், பிரதமர் மோடி பிஹாரில் தூய்மையான பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 100 மின்சாரப் பேருந்துகளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்)' திட்டத்தின் கீழ், 26,900-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன. இது நகர்ப்புறக் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு, வைஷாலி மற்றும் பாட்னாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.