இந்தியா

“பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்”: சுதந்திர தின உரையில் கார்கே சாடல்

மோகன் கணபதி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்தும் தனது ஆட்சியில்தான் நடந்ததாக உரிமை கோரியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றி வணங்கினார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

விழாவில் மல்லிகார்ஜுன கார்கே சிறப்புரையாற்றினார். அவரது உரையின் சில பகுதிகள்: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல; நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியா எந்த அளவுக்கு நனவாகியுள்ளது என்ற கேள்வியை எழுப்பும் நாளும் கூட.

காங்கிரஸ் கட்சி தனது 141 ஆண்டுகால வரலாற்றில், 62 ஆண்டுகள் அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடியது. பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். பலர், சிறைகளில் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை மட்டுமல்லாமல், வறுமை, வேலையின்மை, தீண்டாமை, அநீதி மற்றும் பயம் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்று கனவு கண்டனர்.

சுதந்திரம் என்பது வெறும் அதிகார மாற்றம் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான ஒரு உறுதிமொழி ஆகும். காங்கிரஸைச் சேர்ந்த ஒவ்வொரு பிரதமரும் இந்த நோக்கத்தையே முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

நாடு கட்டமைக்கப்படுவதில் காங்கிரஸ் கட்சி மகத்தான பங்களிப்பை அளித்துள்ளது. ஆனால் இன்று சிலர், தாங்கள் தான் அனைத்தையும் செய்ததாகச் செங்கோட்டையிலிருந்து கூறுகிறார்கள்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நரேந்திர மோடி ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதில் தனக்கு நம்பிக்கையானவர்களைச் சேர்த்தார். ஆனால் இன்று 'காணிக்கைகள் திருடப்படும்' சூழலில், இது குறித்த கேள்விகள் எழுவது இயல்பானது. ஏழைகள் மிகுந்த பக்தியுடன் அளிக்கும் 50 ரூபாய் கூட பாதுகாப்பாக இல்லை என்பதே இன்றைய கேள்வி.

மோடி அரசாங்கத்தின் கையில் பணமும் இல்லை, மனதில் எந்த யோசனையும் இல்லை. நாட்டிற்காக நாமே இதைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான காலம் விரைவில் வரவிருக்கிறது.

ஒவ்வொரு பிரதமரும் தங்கள் காலத்தின் சவால்களுக்கு ஏற்ப இந்தியாவை முன்னேற்றி, அடுத்தகட்ட இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்ததே காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம்.

ஆனால், 21-ம் நூற்றாண்டில் இன்று இளைஞர்களுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் கேள்வி. இன்று இளைஞர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் அவர்களை ஒரு இருண்ட பாதைக்குத் தள்ளியுள்ளன. அதனால் நாடு முழுவதும் இளைஞர் போராட்டங்கள் வெடிக்கின்றன.

நாங்கள் இந்த இளைஞர்களுடன் நிற்கிறோம், அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம். அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. தங்கள் உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடுவது தேசத்துரோகம் அல்ல.

தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 'ஜென்ஸி' (Gen-Z) தலைமுறையினர் தேசத்துரோகிகள் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நம் இளைஞர்கள் தூக்குமேடை வரை சென்று போராடிப் பெற்ற அந்த உரிமைகளை இன்றும் நாம் பாதுகாக்க வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவும்போதுதான் வளர்ச்சியும் செழிப்பும் ஏற்படும். ஆனால் மோடி அரசாங்கத்திற்கு வெறுப்பைப் பரப்புவது மட்டுமே தெரியும்.

சுதந்திரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பினர் நாட்டிற்கு எதிராகச் செயல்பட்டது போலவே, சுதந்திரத்திற்குப் பிறகும் பாஜக நாட்டிற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் நமது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இருப்பது ஒரு ஜனநாயகத்தில் சரியான முறையா?

நானும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்துத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறோம். ஆனால் பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ அவைக்கு வரவில்லை. அதோடு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாததால் தான் அவைக்கு வரவில்லை என்றும், ஆனால் தனது அலுவலக அறையில் அமர்ந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்ததாகவும் அமித் ஷா கூறுகிறார்.

கேள்வி என்னவென்றால், உங்கள் அலுவலக அறையில் அமர்ந்திருப்பதற்காகவா மக்கள் உங்களை அனுப்பினார்கள்?

தேர்தல் ஆணையம், நீதித்துறை, பல்கலைக்கழகங்கள், புலனாய்வு அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றில் அரசின் தலையீடு உள்ளது. இதனாலேயே மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது.

இஸ்ரோ (ISRO) மற்றும் டிஆர்டிஓ (DRDO) போன்ற அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி விஞ்ஞானிகளும் நிபுணர்களும் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தத்துடன் ஒத்துப் போகும் நபர்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு அரசு அழுத்தம் கொடுப்பதால், நமது விஞ்ஞானிகள் பலர் இந்த நிறுவனங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம் என்பது வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் கண்ணியத்தையும் வாய்ப்புகளையும் கொண்டு சேர்ப்பதே ஆகும்.

ஏழைகளின் குரலை கேட்கும், விவசாயிகளை கண்ணியத்துடன் முன்னேற்றும், இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் இந்தியாவை; அதிகாரத்தின் முன் உண்மையைச் சொல்ல யாரும் அஞ்சாத ஒரு இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.

இதுவே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்குவதே நமது உண்மையான சுதந்திரம்.

மோடி அரசு நாட்டு மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. உணவுப் பாதுகாப்பு முதல் கல்வி உரிமை வரை அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ்தான்; ஆனாலும், சிலர் இந்த உண்மைகளை மறுத்து, அதற்கான முழுப் பெருமையையும் தாங்களே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT