புதுடெல்லி: “மக்கள் சேவையே மகேசன் பணி” என்ற கொள்கையுடன் அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்காக 'கர்மயோகி சாதனா சப்தாஹ்' என்ற பெயரில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக பேசியதாவது: கடந்த பிப்ரவரியில் பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) திறந்து வைத்தேன்.
அப்போது, “வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சேவா தீர்த் அலுவலகங்களில் மத்திய அரசு ஊழியர்கள் கால் பதிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தேன். இப்போதும் அதே கருத்தை முன்வைக்கிறேன். மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் கர்மயோகியாக செயல்பட வேண்டும்.
'மக்கள் சேவையே மகேசன் பணி' என்ற கொள்கையுடன் அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அதை நிறைவேற்ற அரசு ஊழியர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்று உள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஆட்சி நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். தற்போது ஆட்சி நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம். இதன்மூலம் அரசு நிர்வாகத் திறன் மேலும் மேம்படும்.
அனைத்து அரசு ஊழியர்களும் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற வேண்டும். ஒரு காலத்தில் முன்னேறிய மாநிலங்கள், பின்தங்கிய மாநிலங்கள், நலிவடைந்த மாநிலங்கள் என்று பல்வேறு பிரிவுகள் இருந்தன.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது. மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நமது நாடு வளர்ச்சி அடையும். கிராமங்கள், நகரங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசின் முகமாக உள்ளன.
அவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது லட்சிய பயணத்தில் “கர்மயோகி சாதனா சப்தாஹ்” பயிற்சி முகாம் மிக முக்கிய அத்தியாயமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.