அர்விந்த் கேஜ்ரிவால்
புதுடெல்லி: “பிரதமர் மோடி ஓமனிலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியிலும் இருக்கும் நிலையில், தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் மூழ்கித் தவிக்கிறது” என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியின் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “பிரதமர் ஓமனில் இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் இருக்கிறார், நாட்டின் தலைநகரம் காற்று மாசுபாட்டில் மூழ்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், “பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால்தான் டெல்லியில் மாசுபாடு ஏற்படுகிறது என்ற வாதம் இனி செல்லாது. பஞ்சாபில் தற்போது புகை அல்லது பயிர்க் கழிவுகள் எரிப்பு எதுவும் இல்லை. அங்கே பயிர்க் கழிவு எரிப்பு இல்லை என்றால், மாசுபாடு டெல்லிக்குள்ளேயேதான் ஏற்படுகிறது. எனவே இங்கேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக டெல்லியில் இத்தகைய கடுமையான மாசுபாட்டை கண்டதில்லை. இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அதிகாரிகள் அதிகாரப்பூர்வ ஏக்யூஐ தரவுகளைத் மாற்றுகின்றனர்.
நாட்டின் தலைநகரம் ஒரு ‘வாயு அறை’யாக மாறியுள்ள நிலையில் பிரதமர் மவுனமாக இருக்கிறார். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நிலைமை மேம்படும்.
மத்திய அரசும் சரி, டெல்லி அரசும் சரி இதில் போதுமான அக்கறை காட்டவில்லை. நானும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் மாசுபாடு குறித்து பொது விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். பாஜக தனது அமைச்சர்களை அனுப்ப வேண்டும். ஆம் ஆத்மி மீது எப்போது வரை குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பீர்கள்? ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, நகரம் இத்தகைய கடுமையான மாசுபாட்டை கண்டதில்லை. அப்போது எனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. பாஜக அரசாங்கம் இப்போது அதிகாரப்பூர்வ ஏக்யூஐ புள்ளிவிவரங்களை திரிக்கிறது. ஒரு நாட்டின் தலைநகரம் வாயு அறையாக மாறும்போது, பிரதமரும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து எந்தக் கவலையும் காட்டாதபோது, மக்களுக்கு எப்படி தூய்மையான காற்று கிடைக்கும்?” என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.