ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ்
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரி தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஆக.15-ல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்படுகிறது. மாநிலங்களால் பரிந்துரைக்கப்படும் இந்த விருதினை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அங்கீகரித்து தேர்வு செய்வார். இதில், வீர, தீர செயல்களுக்கான விருது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படும் முக்கியமான என்கவுன்ட்டர்களுக்கு மட்டுமானது.
இந்த வீர, தீர செயல்களுக்கான விருதுகள் இந்த வருடம் உபி-யின் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளில் ஒருவராக தமிழரான ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ் இடம் பெற்றுள்ளார். இந்த பதக்க விருதுகள் விரைவில் டெல்லியில் நடைபெறும் விழாவில், குடியரசு தலைவர் வழங்குவார்.
கடந்த 2017-ல் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்த பின் முதல் என்கவுன்ட்டர் நடத்தியவர் தமிழர் முனிராஜ். தொடர்ந்து தாம் பணியாற்றிய புலந்தஷெஹர், பரேலி, காஜியாபாத், அலிகர் மற்றும் ஆக்ராவில் பல என்கவுன்ட்டர்களை நடத்தி பல முக்கியக் குற்றவாளிகள் பிடித்துள்ளார். இவர்களில் 14 முக்கியக் குற்றவாளிகள் உயிரிழந்தனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் அவர் ‘உபி சிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
தற்போது, முரதாபாத் டிஐஜியான முனிராஜ் பெற்ற விருது ஆக்ராவின் எஸ்எஸ்பியாக இருந்தபோது நடத்திய என்கவுன்ட்டருக்காகக் கிடைத்துள்ளது. இவர் கொடூர ஆள் கடத்தல் கும்பலின் இரண்டு முக்கியக் குற்றவாளிகளான பதன்சிங், அக் ஷய் சிங் ஆகியோரை என்கவுண்டர் செய்ததற்காக அளிக்கப்பட்டுள்ளது. 2021-ல் ஆக்ராவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் உமாகாந்த் குப்தாவைக் கடத்தி ரூ.5 கோடி பிணைத் தொகை கேட்கப்பட்டது.
ராஜஸ்தான் எல்லையில் வனப்பகுதியில் மருத்துவரை மீட்டு, இருவரை முனிராஜ் என்கவுன்ட்டர் செய்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த முனிராஜ் உபி மாநிலப் பிரிவு அதிகாரி. தர்மபுரியின் பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி.