சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
தென்காசி: அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார். அதை விமர்சிக்கும் வகையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்கும். இது ட்ரம்ப் ஈவுத்தொகை என அழைக்கப்படும்.
வரும் இடைத்தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்குச் சீட்டில் எனது பெயர் இருப்பதாகவே கருதிக்கொண்டு குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அதை ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார். ‘நாங்கள் இதைத் தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரப்பினோம். ட்ரம்ப் தற்போது திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ என தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை சுட்டும் வகையில் ஸ்ரீதர் வேம்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.