இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவை பரிசீலிக்க மக்களவைக்கு குடியரசுத் தலைவர் பரிந்துரை

மோகன் கணபதி

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 30-ம் தேதி கூட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை பரிசீலிக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மக்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை பரிசீலிக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மக்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

அரசியலமைப்பின் 117(3) வது பிரிவின்படி, ஒரு மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் இருந்து செலவுகள் ஏற்படும் சூழல் உருவானால், அத்தகைய மசோதாவை குடியரசுத் தலைவர் பரிந்துரைக்காமல் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் நிறைவேற்ற முடியாது. இந்த பின்னணியில், இந்த மசோதாவுக்கு தனது பரிந்துரையை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த மசோதா 2026 (132வது திருத்தம்), தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026, யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைந்துள்ளன. இந்த மசோதா தொகுப்புக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ஏற்கெனவே, தாக்கல் செய்யப்பட்ட மக்களவையில் நிறைவேறாமல் முடங்கி இருந்த அரசியலமைப்பு 131வது திருத்த மசோதாவை அரசு திரும்பப் பெற உள்ளது. அதற்குப் பதிலாக புதிய மசோதாக்களை திங்கள் கிழமையன்று தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதா மூன்று முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது. ஒன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கும். இதன்படி, மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கும். மாநில சட்டமன்றங்களின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-ல் இருந்து 650 ஆக உயரும்.

இரண்டாவது, 2026-27 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல், ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும். அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையிலான இடங்களின் பங்கீடு அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2051-ம் ஆண்டு வரை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.

மூன்றாவது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்துதல். 2029-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், தொகுதி மறுவரையறை ஆணையம் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும். நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை 4 நாட்கள் மக்களவை கூட்டத்தொடர் நடைபெறும் அதேநேரத்தில், டிசம்பர் 2 அன்று மாநிலங்களவை தனியாகக் கூடும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT