கோப்புப் படம்
புதுடெல்லி: தனியாருக்கு சொந்தமான இடங்களில் தொழுகை நடத்துவதற்கு உ.பி.யில் சம்பல் உள்ளிட்ட சில மாவட்டங்கள் தடை விதித்தன. இந்த சூழலில் சம்பல் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முனாசீர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் அத்துல் தர், சித்தார்த் நந்தன் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் முழு உரிமை அளிக்கிறது. எனவே, எந்தவொரு நபரும் தனது சொந்த வளாகத்தில் நடத்தும் பிரார்த்தனைகளையோ அல்லது மதச் சடங்குகளையோ தடை செய்ய முடியாது.
தனியார் இடங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு தனி நபர் அல்லது குழுக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை அரசு கவனத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முனாசீர் கான் அனுமதி கேட்ட நிலம் 1995-ல் மசூதி கட்ட அவரது தாத்தாவால் ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த இடத்தில் உள்ள கட்டமைப்பை முழு மசூதியாக நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால், அங்கு தொழுகை நடத்துவதை தடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.