பிரகலாத் ஜோஷி
புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் வினாத் தாள் கசிவால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய கூடாது என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.
இதன் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லியில் சேவா தீர்த் அலுவலக வளாகத்தில் உள்ள கல்வி அமைச்சகத்தில் அவர் நேற்று புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சனிக்கிழமை கர்நாடகாவில் இருந்தேன். மத்திய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட உடன் அன்றிரவே டெல்லியை வந்தடைந்தேன். ஞாயிற்றுக் கிழமை காலையில் கல்வி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன். இது எனக்கு புதிய துறை. எனவே முதல் கட்டமாக அனைத்து அதிகாரிகள் உடன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவேன்.
கல்வித் துறையில் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கேட்டறிவேன். பிரதமர் நரேந்திர மோடி என்னை நம்பி மிகப் பெரிய பொறுப்பை வழங்கி உள்ளார். எனவே மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி காரணமாக மத்திய கல்விச் செயலாளர் வினீத் ஜோஷி கடந்த 24-ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய கல்விச் செயலாளராக டி.கே. அனில்குமார் நியமிக்கப்பட்டார். மத்திய கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து புதிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம், புதிய செயலாளர் அனில் குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். நுழைவுத் தேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அப்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) இருந்து ஏற்கெனவே 47 அலுவலர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அடுத்த ஒரு மாதத்துக்குள் என்டிஏ அமைப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.