சந்திப்பூர்: ஒடிசா கடற்கரையில் இருந்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளம் உள்ளது. இங்கிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சோதனை முயற்சியாக 2 பிரளய் ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் குறிப்பிட்ட பாதையில் சென்று அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் குறைந்த தொலைவு ஏவுகணையாகும்.
இது 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை வெடிபொருட்களை சுமந்து செல்லக் கூடியது. 150 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை சென்று இலக்குகளை தாக்கக் கூடியது. மேலும் பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல்வேறு வகை குண்டுகளை கொண்டு செல்லக்கூடியது. தாக்குதலின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் அமைப்பு இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஏவுகணை உற்பத்தியில் பாரத் டைனமிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன. இந்த சோதனையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள், இந்திய விமானப் படை, ராணுவ அதிகாரிகள், உற்பத்தியில் பங்கு வகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு டிஆர்டிஓ, விமானப் படை மற்றும் ராணுவத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இந்த சோதனையின் மூலம் ஏவுகணையின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.