இந்தியா

“நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் சவால்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் வார்த்தைப் போர்

டெக்ஸ்டர்

ஹைதராபாத்: மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்ட கருத்துக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொய்களைப் பரப்புவதை நிறுத்துமாறு கூறியுள்ள அவர், இது குறித்துப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பவன் கல்யாணுக்கு சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பவன் கல்யாண், "நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுத் தடுத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை விட அரசியல் கணக்குகளுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது தெளிவாகிறது. பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கான நீண்டகால நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் தாமதப்படுத்துகின்றன" என்று சாடியிருந்தார்.

பவன் கல்யாணின் இந்தப் பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள பிரகாஷ் ராஜ், "பிரதமர் மோடியைத் திருப்திப்படுத்துவதற்காக குடிமக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-லேயே அங்கீகரிக்கப்பட்டது. அதை இப்போதும் நிறைவேற்ற முடியும். ஆனால், உங்கள் தரப்பினர் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றவே துடிக்கிறார்கள். 

தொகுதி மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பலவீனமடையும். உங்களைத் துணை முதல்வராக்கிய ஆந்திர மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமைகளையும் அடகு வைக்காதீர்கள். இது குறித்து உங்களுக்கு விளக்க நான் விவாதத்திற்குத் தயார். நீங்கள் தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக மக்களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா, நாடாளு​மன்​றத்​தில் நேற்று நடந்த வாக்​கெடுப்​பில் போதிய ஆதரவு கிடைக்​காத​தால் தோல்வி அடைந்​தது.

SCROLL FOR NEXT