பிரதமர் நரேந்திர மோடி

 
இந்தியா

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” - பிரதமர் மோடி

வேட்டையன்

புதுடெல்லி: மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்காது என கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

எதிர்வரும் 2029 பொதுத் தேர்தலை முன்னிட்டு தொகுதி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இருந்து 816 என தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல். இருப்பினும் இதில் மக்கள் தொகை கட்டுக்குள் வந்த மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி எண்ணிக்கையில் எந்தவித பாதிப்பும் கூடாது என்ற குரலை தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ளன.

          

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசினார். “கேரளா, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு சார்ந்த நடவடிக்கையில் சிறந்து விளங்கியுள்ளன. இருப்பினும் சில தனிநபர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்த காரணத்தால் தங்கள் மாநிலங்களுக்கான மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அவர்கள் சொல்லி வருகின்றனர்.

இந்த விவகாரம் சார்ந்து நாடாளுமன்ற கூட்டத்தில் நாங்கள் உறுதி அளிக்க விரும்புகிறோம். அதில் கேரளா, தமிழகம், ஆந்திரா, கோவா, தெலங்கானா என எந்த மாநிலத்திலும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து மாநிலங்களும் பலன் பெறுகின்ற வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சித்தராமையா கருத்து: “ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தொகுதி மறுசீரமைப்பின் கீழ் தென் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது நமது கேள்வி அல்ல. அந்த இடங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும். அதன் மூலம் யார் விகிதாச்சார ரீதியாக பலன் பெறுகிறார்கள் என்பதுதான் நம் கவலை.

ஐந்து தென் மாநிலங்களும் 63 முதல் 66 இடங்களை கூடுதலாக பெறும். அதே நேரத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் 128 முதல் 131 இடங்களை கூடுதலாக பெறும். இது தென் மாநிலங்கள் பெறுகின்ற எண்ணிக்கையை காட்டிலும் இரட்டிப்பாகும். இது வெறும் விரிவாக்கம் மட்டுமல்ல. அதனால் கூட்டாட்சி முறை மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் இந்த முயற்சிக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்பார்கள்” என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT