புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டு விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபலமான உணவு வகைகளான சாத்து, மகானா ஆகியவை வழங்கப்பட உள்ளன.
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று முதல் (செப்டம்பர் 12) 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இம்நாட்டில் பங்கேற்கப் போகும் விருந்தினர், பத்திரிகையாளர்களுக்கு பிஹார் மாநில பிரபல உணவு வகைகளான சாத்து, மகானா லட்டு ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டு அமைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விருந்தினர்களுக்கு வழங்கப்படும் வெல்கம் கிட்டில் தண்ணீர் பாட்டில், காபி கோப்பை, பிரிக்ஸ் மாநாட்டு டைரி, பேனா, விழா மலர், சாத்து, மகானா லட்டு தின்பண்டங்கள் ஆகியவை இடம்பெறும்.
மேலும் ஒடிசாவின் கோராபுட் காபி பொடி, குஜராத்தின் கைவினைப் பொருட்களும் அந்த வெல்கம் கிட் அடங்கிய பையில் இடம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டு விருந்தினர்களுக்கு பிஹாரின் தின்பண்டங்கள் வழங்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு, பிஹார் மாநில முதல்வர் சாம்ராட் சவுத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தின் மகானா வகை உணவு, 2022-ல் புவிசார் குறியீடு பெற்றது. மேலும் சாத்து வகை உணவு, வறுத்த கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குறைந்த விலை என்ற போதிலும் மிகவும் சத்து வாய்ந்தது சாத்து என்பது குறிப்பிடத்தக்கது.