புதுடெல்லி: மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதால், டெல்லியில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் குறைந்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனந்த் விகார், இந்தியா கேட் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் காணப்படும் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் ஆளும் டெல்லி அரசு இறங்கியுள்ளது. இதில், ஒரு முக்கிய நடவடிக்கையாக வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை அரசு கட்டாயப்படுத்தி உள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா அறிவித்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து டெல்லி வாகன ஓட்டிகளிடம் இந்த சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்திருப்பவர்களுக்கே பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்(பியுசி) இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றன. சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படுகிறது என்றும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பியுசி சான்றிதழ் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்துள்ளனர். இதுகுறித்து ஜன்பாத் பெட்ரோல் நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளர் முகேஷ்குமார் என்பவர் கூறும்போது, “பணம் கொடுத்து வாகனத்தை வாங்கி விட்டு அதை இயக்க முடியாத வகையில் விதிகளை அமல்படுத்தினால் எப்படி" என்றார். மற்றொரு வாடிக்கையாளர் கூறும்போது, “இதுபோன்ற விதிமுறைகளை அமல்படுத்துவது சரிதான். அப்போதுதான் டெல்லியில் காற்று மாசுபாடு குறையும்” என்றார்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ளதா என்பதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட டெல்லி போக்குவரத்து கழக அதிகாரி ஜே.டி.சர்மா என்பவர் கூறும்போது, “பெட்ரோல் நிலையங்களில் பியுசி சான்றிதழை காண்பித்த பிறகு பெட்ரோல் நிரப்ப அனுமதி அளிக்கிறோம். சில பெட்ரோல் நிலையங்களில் கேமராக்கள் இன்னும் வகைப்பட்டவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம். மேலும் வாகனங்கள் பிஎஸ்-6 தரநிலையை பெற்றுள்ளதா என்பதையும் கண்காணிக்கிறோம்.
இதுதொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்துள்ளது. பியுசி சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்றார்.