கன்னா: பஞ்சாப் மாநிலம், கன்னா மாவட்டத்தில் சிவசேனா நிர்வாகி வீட்டில், போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) போதைப் பொருட்களை ரகசியமாக வைத்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த வீடியோவில், சாதாரண உடையில் வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், படுக்கையறையில் உள்ள மெத்தையின் அடியில் ஒரு பொட்டலத்தை மறைத்து வைப்பது போன்றும், சிறிது நேரத்துக்குப் பிறகு சீருடையில் வரும் போலீஸார் அந்த அறைக்குள் நுழைந்து, அந்தப் பொட்டலத்தை போதைப்பொருள் எனக் கூறி பறிமுதல் செய்வது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து, கன்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்பன் அலுவாலியா கூறும்போது, “சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், எஸ்பி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.