ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் நள்ளிரவில் 3 மணி நேரம் தனியாக ஒரு சாலையில் நின்றார். அவருக்கு அவ்வழியாக சென்ற 40 பேர் பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது மல்காஜ்கிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத் மல்காஜ்கிரி காவல் ஆணையர் சுமதி. இவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, அப்பகுதியில் பெண்கள் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என தெரிந்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, சீருடையில் செல்லாமல் சுடிதார் அணிந்து கொண்டு மல்காஜ்கிரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு சாலையில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை தனியாக நின்றார்.
அப்போது அவ்வழியே சென்றவர்களில் படித்த இளைஞர்கள், அலுவலக ஊழியர்கள், குடிபோதையில் இருந்தவர்கள் என 40 பேர் இவரை அணுகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் அவர்களை பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் அமர வைத்தனர். ஒரு பெண் தனியாக இருந்தால் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பீர்களா என தங்கள் பாணியில் விசாரித்தனர். பிறகு அவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து விவரங்களை எடுத்துக் கூறினர். இதுகுறித்து 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை ஆணையர் சுமதி கூறுகையில், “எனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பெண்களின் பாதுகாப்பை அறிய தீர்மானித்தேன். அதனால் நள்ளிரவில் சாலையில் தனியாக நின்றேன். 40 பேர் என்னிடம் வந்து வம்பிழுத்தனர். தகாத வார்த்தைகளைப் பேசினர். இதில் மாணவர்களே அதிகம். மது அருந்தியவர்கள், கஞ்சா உபயோகித்தவர்களும் இதில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விசாரித்து, அவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து நடந்தவற்றை கூறி கவுன்சிலிங் செய்தோம். போதை ஆசாமிகளுக்கு அபராதம் விதித்தோம். கஞ்சா ஆசாமிகளிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தனியாக உள்ள பெண்களிடம் வம்பிழுத்தால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற பயம் ஆண்களிடையே வரவேண்டும் என்பதற்காக இப்படி செய்தோம்” என்றார்.
பெண் போலீஸ் அதிகாரியின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சுமதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் டிஎஸ்பியாக இருந்தபோது காஜிபேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் தனியாக நின்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பலரை கைது செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.