இந்தியா

போராட்டத்தில் போலீஸாரின் அத்துமீறலை ஏற்க முடியாது: மாணவர்கள் மீதான தடியடிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்​வுக்கு எதி​ரான போராட்​டத்​தில் மாணவர்​கள் மீது காவல் ​துறை​யினர் தடியடி நடத்​தி​யதற்கு எதி​ராக தொடரப்பட்ட மனுக்​கள் மீதான விசா​ரணை​யின்​ போது, தீவிர போராட்​டம் நடை​பெறுகிறது என்​ப​தற்​காக காவல்​ துறை​யினரின் வரம்பு மீறிய நடவடிக்​கைகளை நியாயப்​படுத்த முடி​யாது என்று உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வியமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி டெல்லி ஜந்தர் மந்​தர் மற்​றும் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் மாணவர்களின் போராட்​டங்​கள் நடை​பெற்று வந்​தன. இந்​தப் போராட்​டங்​களின் போது மாணவர்​களின் மீது காவல்​துறை​யினர் தடியடி நடத்தியதாக​வும் துப்​பாக்கிச் சூடு நடத்​தி​ய​தாக​வும் அவ்வாறு மாணவர்கள் மீது அத்​து​மீறி தாக்​குதல் நடத்​திய காவல்​துறை​யினர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்யப்பட்டிருந்​தன.

அந்த மனுக்​கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது மனு​தா​ரர்​களுக்​காக மூத்த வழக்​கறிஞர் விகாஸ் சிங் மற்​றும் வழக்​கறிஞர் பவுசியா ஷக்​கீல் ஆகியோர் ஆஜராகி, “மாணவர் போராட்​டத்​திற்கு மிக அதிக அளவில் காவல்​ துறை​யினர், பாது​காப்​புப் படை​யினர் குவிக்​கப்​பட்​டு, மாணவர்​கள் மீது தடியடி தாக்​குதல்​கள் நடத்தப்பட்​டுள்​ளதோடு, ஏ.கே.47 ரக துப்​பாக்​கி​களும் பயன்படுத்தப்​பட்​டுள்​ளது அதிர்ச்சி அளிப்​ப​தாக​ உள்ளது” என்றனர்.

அப்​போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், “அமை​தி​யான முறை​யில் போராடு​வதற்​கான உரிமை குடிமக்​களுக்கு அரசியலமைப்​பால் முழு​மை​யாக உத்​தர​வாதம் அளிக்கப்பட்டுள்ளது, அதனை மறுக்க முடி​யாது. மேலும், தீவிர போராட்​டம் நடை​பெறுகிறது என்ற காரணத்தை காட்டி காவல்துறை​யின் வரம்​பு மீறிய நடவடிக்​கைகளை​ நியாயப்படுத்த முடி​யாது” என்றார்.

அப்​போது காவல்​ துறை​யினர் சார்​பாக ஆஜராகி​யிருந்த வழக்கறிஞர், “போராட்​டக்​காரர்களால் காவல்​ துறை​யினர் கடுமை​யாக தாக்​கப்​பட்​டுள்​ளனர், பலர் படு​காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்” என்றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிபதி ஜாய்​மால்யா பக் ஷி, “மாணவர்​கள் மட்​டுமின்றி பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படும் காவலர்​கள் உட்பட ஒவ்​வொரு தனி​நபரின் உயிரும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது” என்றார்.

இதைதொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், “போராட்டத்​துக்​கென ஒரு நடை​முறை இருக்க வேண்​டும். அதற்கான உரிய இடவசதி இருக்க வேண்​டும், அமைதி வழி போராட்​டத்​துக்கு எவ்​விதக் கட்​டுப்​பாடுகளும் இருக்​கக்​கூ​டாது. ஆனால்,போராட்​டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்​கள் ஏதேனும் நடை​பெற்​றால் அதன் மீது காவல் ​துறை​யினர் நடவடிக்கை எடுக்​கலாம்.மேலும் மாணவர்கள் போ​ராட்​டம் தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள அனைத்​து மனுக்களையும்​ ஒன்​றாக இணைத்​து நாளை மீண்​டும்​ விசாரணைக்​கு எடுத்​துக்​ கொள்​ளப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT