புதுடெல்லி: வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்கு 18 வயதுக்குட்பட்ட ஒருவர் கடத்தப்படும்போது அதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்தி வாலா, ஆர்.மகா தேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்களை விசாரித்து நீதிபதிகள் கூறியதாவது:
பய முறுத்தல், பிற வகையான கட்டாயப்படுத்துதல், ஆட் கடத்தல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ஒருவரின் நிலையைத் தவறாகப் பயன்படுத்துதல், ஒருவரின் சம்மதத்தைப் பெறுவதற்காகப் பணம் அல்லது சலுகைகளை வழங்குதல், பெறுதல் போன்ற பட்டியலிடப்பட்ட ‘வழிமுறைகளில்' ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தால், திட்டமிடப்பட்ட சுரண்டலுக்கு ஒரு வயது வந்த பாதிக்கப்பட்டவர் அளித்த சம்மதம் பொருட்படுத்தத்தக்கதல்ல.
அதாவது, ஆட்கடத்தலுக்கு ஆளான ஒரு குழந்தையோ அல்லது பாதிக்கப்பட்டவரின் சம்மதத்தையோ பொருட்படுத்தக்கூடாது. வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்காக குழந்தைகளைக் கடத்தும் வழக்குகள், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டம்' ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளுடன் சேர்த்து, கடுமையான போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய முடியும்.
பாலியல் தொழிலாளர்களின் கவலைகளைத் தணிக்கும் வகையில், இந்த நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்கிறது.
அதேவேளையில், குற்றம் இழைத்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்கும் உரிய சட்டக் கட்டமைப்பையும் தெளிவுபடுத்துகிறோம்.
பாலியல் தொழிலில் தாங்கள் பணியமர்த்தப்படுவதாக ஒருவருக்கு இருக்கும் விழிப்புணர்வு மட்டும், அவர்கள் ஆட் கடத்தலுக்கு ஆளான ஒரு பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலிருந்து அவர்களை விலக்கிவிடாது. ஏனெனில், பணிச் சூழல்கள் தொடர்பாக அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடும். அந்த பணியிடச் சூழல்களே பிற்காலத்தில் சுரண்டல் நிறைந்தவையாக அமைந்திருக்கலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 23-வது ஷரத்து, மனிதக் கடத்தல், பிச்சை எடுத்தல் மற்றும் அதுபோன்ற பிற அனைத்து வகையான கட்டாய உழைப்பு முறைகளையும் தடை செய்கிறது. மனிதக் கடத்தல் எந்த வடிவில் காணப்பட்டாலும், அந்த ஷரத்து அதனைத் தடை செய்கிறது. எனவே, வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்கு மேற்கொள்ளப்படும் மனிதக் கடத்தல் வழக்குகளை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.