புதுடெல்லி: குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பண்ணையை பிரதமர் மோடி இன்று காலை பார்வையிடுகிறார். பின்னர் பனஸ்கந்தாவில் நடைபெறும் விழாவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 24-வது தவணையாக குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடியை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இரு ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் ஏக்தா நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அங்கு பாரத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
இரவில் நடைபெறும் நர்மதை ஆரத்தி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதன்பிறகு சனிக்கிழமை காலை ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலைக்கு (சர்தார் படேல் சிலை) பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அங்கு நடைபெறும் விழாவில் ரூ.400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் ஏக்தா நகரின் வனப்பகுதிகளை அவர் பார்வையிடுகிறார். மாலை 5.30 மணிக்கு சர்தார் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.