இந்தியா

“கர்நாடக அரசு மீது மக்களின் அதிருப்தி அதிகரித்ததே முதல்வர் மாற்றத்துக்கு காரணம்” - பிரதமர் மோடி

மோகன் கணபதி

சூரத்: கர்நாடக காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்ததன் காரணமாகவே அம்மாநிலத்தில் முதல்வர் மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

குஜராத்தின் சூரத் நகரில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு மிகுந்த கோபம் உள்ளது. அதனால்தான் முதல்வரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் வாக்காளர்களின் கடும் அதிருப்தியை அக்கட்சி எதிர்கொண்டு வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சியின் ஆட்சி நிர்வாகம் குறித்து மக்கள் சலிப்படைந்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி தேர்தல்களில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களிடம் இருந்து மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலும் ஒரே செய்தியைத்தான் உணர்த்துகின்றன. குழப்பம், நிச்சயமற்ற தன்மை, விரக்தி ஆகியவற்றை நாடு விரும்பவில்லை.

தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, எரிசக்தித் துறையில் தன்னிறைவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. கடந்த 12 ஆண்டுகளில் நாடு கட்டமைத்துள்ள திறன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

நாட்டின் வளர்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான் பாஜக மீதும் அதன் வளர்ச்சித் திட்டங்கள் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதானால்தான் மக்கள் மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT