இந்தியா

பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம் வருகை - திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபட திட்டம்

மோகன் கணபதி

புதுடெல்லி: ரூ.7,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்க மார்ச் 1-ம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான பயண விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிப்.28-ம் தேதி இரவு 9 மணி அளவில் சென்னை வருகிறார். மறுநாள் (மார்ச் 1) காலை 11.45 மணி அளவில் புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்கு ரூ.2,700 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

          

அதன் பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் மதுரை செல்லும் பிரதமர், ரூ.4,400 கோடி மதிப்பிலான நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்த இருக்கிறார். இதையடுத்து, மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

புதுச்சேரி திட்டங்கள்: பிரதமர் இ-பேருந்து சேவை திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகளின் சேவையை பிரதமர் தொடங்கிவைக்கிறார். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான குடியிருப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் முக்கியமான கழிவுநீர் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்கிறார். காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏபிஜே அப்துல் கலாம் பிளாக், கங்கா விடுதி ஆகியவற்றை துவக்கிவைக்கும் பிரதமர், ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளார்.

750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காரசூர் - சேதாரபேட்டை தொழிற்பேட்டையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், 41 கிராமப்புற சாலைகள் கட்டுமானம், சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை துவக்கி வைக்கிறார். மேலும், நகர்ப்புற சாலைகள், வடிகால் அமைப்புகள், மாணவர் விடுதிகள், விளையாட்டு வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக திட்டங்கள்: மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் ஆகிய மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர், சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கும்பகோணம், ஏர்காடு, வேலூர் ஆகிய நகரங்களில் ஆகாஷவாணி பண்பலை வானொலிகளை பிரதமர் தொடங்கிவைக்கிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை 332ஏ-ன் கீழ் மரக்காணம்-புதுச்சேரி சாலை விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை 87ன் கீழ் பரமக்குடி - ராமநாதபுரம் சாலை விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

SCROLL FOR NEXT