இந்தியா

பிப். 17ல் வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான் - பிரதமர் மோடிக்கு அழைப்பு

மோகன் கணபதி

டாக்கா: வங்கதேச பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் வரும் 17ம் தேதி அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, வங்கதேசம் அழைப்பு விடுத்துள்ளது.

வங்​கதேசத்​தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்​தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்​களைக் கைப்​பற்​றியது. 300 இடங்​களைக் கொண்ட வங்​கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் சுமார் 17 ஆண்​டு​கள் கழித்து வங்​கதேசத்​தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்​ளது. வங்​கதேச பிரதம​ராக தாரிக் ரஹ்​மான் வரும் 17ம் தேதி பதவியேற்க உள்ளார்.

          

பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வங்கதேசம் அழைப்பு விடுத்துள்ளது. எனினும், வரும் 17ம் தேதி பிரதமர் மோடி மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளார். இதனால், பிரதமர் நரேந்திர மோடி டாக்கா செல்ல வாய்ப்பு இல்லை என்றும் தனக்குப் பதிலாக டாக்கா செல்வதற்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரில் ஒருவரை நியமிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஷேக் ஹசீனாவின் பதவியிழப்புக்குப் பிறகு இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. எனினும், வங்கதேசத்துடனான புதிய உறவை நோக்கி மிக விரைவாக நகர்வதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்தியா விரும்பவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள், சீனா, மலேசியா, சவூதி அரேபியா, துருக்கி போன்ற பிற நட்பு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தாரிக் ரஹ்மான், டாக்காவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா உடனான உறவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தாரிக் ரஹ்மான், ''வங்கதேசம் மற்றும் அதன் மக்களின் நலன்கள் நமது வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும்'' என்று தெரிவித்தார். முன்னதாக, ''இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் பிஎன்பி அரசாங்கம் சமநிலையான உறவுகளைப் பேணும். எந்த நாட்டையும் எஜமானராக நடத்தாது'' என்று தாரிக் ரஹ்மான் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT