இந்தியா

அயோத்தி ராமர் சிலை நெற்றியில் சூரிய திலகம் - காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழிபாடு

மோகன் கணபதி

புதுடெல்லி: அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் சிலை நெற்றியில், ராமநவமியான இன்று சூரிய திலகம் ஏற்பட்டது. இந்நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தரிசனம் செய்தார்.

ராமநவமியான இன்று, ராமஜென்மபூமியில் உள்ள குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலகம் (நெற்றிப்பொட்டு) போல் படும் நிகழ்வு இன்று நிகழ்ந்தது. சரியாக நண்பகலில் இந்த சூரிய திலகம், ராமரின் நெற்றியை ஒளிரச் செய்தது. அப்போது, கோயில் அர்ச்சகர்கள், ராமருக்கு சிறப்பு பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தனர். இதன் நேரடி ஒளிபரப்பை பிரதமர் மோடி, காணொலி வழியாக தரிசித்தார்.

ராம நவராத்திரி என்று அழைக்கப்படும் ஒன்பது நாள் திருவிழா, ராமரின் பிறந்த நாளான இன்று நிறைவடைகிறது. இந்த ஒன்பது நாட்களும் பராசக்தியின் ஒன்பது அவதாரங்களைச் சிறப்பிப்பதற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த திருவிழா இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் இந்த ஒன்பது நாளும் விரதம் இருந்து, தங்கள் விரதத்தை இன்று முடிக்கின்றனர். இந்த விரத நாட்களில், மது மற்றும் புகைப்பிடித்தலைத் தவிர்த்து சாத்வீக சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சைத்ர நவராத்திரி என்று அழைக்கப்படும் இந்த நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இன்று, ராமர் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அந்த வகையில், குழந்தை ராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அயோத்தி வந்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT