புதுடெல்லி: பிரதமர் மோடி மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி என இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி 2018-ல் பிரதமர் மோடியை ‘சிறந்த பேச்சாளர்’ எனக் குறிப்பிட்டது குறித்து, சாம் பிட்ரோடா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சோனியா கூறியது போல பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த பேச்சாளர். தனிப்பட்ட முறையில் மிகவும் அன்பானவர், கருணையானவர் மற்றும் அக்கறையுள்ளவர். அவருடன் எனக்கு கொள்கை ரீதியான வேறுபாடுகள் உள்ளனவே தவிர, தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அவர் (பிரதமர் மோடி) எனது குஜராத்தி நண்பர். நான் குஜராத்தில் உள்ள அவரது வீட்டிற்குப் பலமுறை சென்றுள்ளேன். உலகம் குறித்த அவரது பார்வையிலும், அவரது சித்தாந்தத்திலும் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் அது தனிநபருக்கு எதிரானது அல்ல; சித்தாந்தத்திற்கு எதிரானது. இரண்டும் வெவ்வேறானவை என்ற புரிதல் வேண்டும்.
அரசியல் ரீதியாக மோடியுடன் என்னால் மாறுபட முடியும்; அதேநேரம் அவருடன் அமர்ந்து இரவு உணவு அருந்தி, சிரித்துப் பேசவும் என்னால் முடியும். எனவே எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிட்ரோடாவின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, “சாம்பாய் மற்றும் அவரது மனைவி அஞ்சனா பென் ஆகிய இருவருக்கும் இனிய தீபாவளி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரப்போகும் ஆண்டு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்ததாக அமைய வேண்டுகிறேன். ஜெய் ஜெகன்னாதா" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.