கொல்கத்தா: படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நாட்டில் முதல்முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சொகுசு ரயில்களில் இருக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.
இந்த சூழலில் மேற்குவங்கத்தின் மால்டா ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மேற்குவங்கத்தின் ஹவுரா, அசாமின் குவாஹாட்டி நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது.
4 அம்ரித் ரயில்கள்: மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி- திருச்சி, நியூ ஜல்பைகுரி- நாகர்கோவில், மேற்குவங்கத்தின் அலிபுர்துவார்- பெங்களூரு, அலிபுர்துவார்- மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையே 4 அம்ரித் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டில் முதல்முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயிலின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிநாடுகளில் அதிகமாக பரவி வருகின்றன.
ரயில்வே துறையில் தன்னிறைவை பெற்றுள்ளோம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவில் அதிக ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் சர்வதேச தரத்தில் உள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
மேற்குவங்கத்தில் இருந்து புதிதாக 4 அம்ரித் ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் மேற்குவங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பலன் அடைவார்கள். குறிப்பாக புனித பயணம் மேற்கொள்வோர், தொழிலாளர்கள், பொதுமக்களின் பயணம் எளிதாகும்.
மேற்குவங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் ஊழலில் திளைத்து வருகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. திரிணமூல் ஆட்சியில் மேற்குவங்கம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை திரிணமூல் அரசு முடக்கி உள்ளது.
மேற்குவங்கத்தில் வெளிநாட்டினர் அதிக அளவில் ஊடுருவி வருகின்றனர். வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.