பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய 4 நான்கு முக்கிய அம்சங்களில் இந்தியாவின் கவனம் உள்ளது என்று பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
18-வது பிரிக்ஸ் மாநாடு நேற்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸின் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:
மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய 4 நான்கு முக்கிய அம்சங்களில் இந்தியாவின் கவனம் உள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் இதை பயனளிக்கும் வகையில் மாற்ற இந்தியாவால் முடியும்.
மேலும், அரிய கனிம வளங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது பொதுவான வளர்ச்சிக்குத் தடைகளை உருவாக்கும். (கனிம வள ஏற்றுமதி விவகாரத்தில் சீனா கடிவாளம் போட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்)
பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையினரை கருத்தில் கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கியது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். வளர்ச்சியையும் சுற்றுச்சூழலையும் சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இதை இந்தியா நம்புகிறது. அதனால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்கால தலைமுறையினருக்காக இது நமது பொறுப்பாகும்.
‘பிரிக்ஸ் கனெக்ட்’ மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு திறன், பல்வேறு பணிகளில் பெண்களின் பங்கேற்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் திறன் கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மாநாடு ஊக்குவிக்கிறது.
பிரிக்ஸ் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது சிறிய நிறுவனங்களை இணைக்கும்.
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் உலகளாவிய நம்பிக்கையை பிரிக்ஸ் பெற்றுள்ளது. தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சார்ந்த ஒருமித்த கருத்து இந்த மாநாட்டில் எட்டப்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டின் தீர்வுகள் உலக நாடுகளுக்கு பயனளிக்க வேண்டும். உலகின் தெற்கு நாடுகளின் நம்பிக்கையை பிரிக்ஸ் பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இன்று பிற்பகல் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி, பாரத் மண்டபத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு அந்தந்த நாட்டு தலைவர்களுடன் தனித்தனியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.