இந்தியா

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மோகன் கணபதி

புதுடெல்லி: ​நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் ரயில் புறப்பட்டது. ரயிலில் பள்ளி மாணவர்கள் பலரும் பயணித்தனர்.

நிகழ்ச்சியில், ரூ.14,700 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்சித் திட்​டங்​கள், பல்​வேறு திட்​டங்​களுக்கு பிரதமர் மோடி அடிக்​கல் நாட்டினார். தொடர்ந்து, ஹரி​யா​னா​வில் ரூ.12,470 கோடி, சண்டிகரில் ரூ.4,700 கோடி, பஞ்சாபில் ரூ.5,470 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித்​ திட்டங்களையும் பிரதமர் தொடங்​கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது.

நாட்டின் முதல் ரயில் மும்பை - தானேவுக்கு இடையே இயக்கப்பட்டது என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். அதேபோல், வரும்காலத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் குறித்த செய்தி வரும்போது ஹரியானா, ஜிந்த், பானிபட் ஆகிய பெயர்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.

நான் ஜிந்த் நகருக்கு வரும்போது எனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமைப்பு ரீதியிலான பணிகளுக்காக ஜிந்த் வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது” என தெரிவித்தார்.

முதல் ஹைட்ரஜன் ரயில் உருவாக்கத்தின் பின்னணி:

இந்தியாவில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் வகையி​லான ரயில் இன்​ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்​டத்தை 2022 ஏப்​ரலில் தொடங்​கியது.

இத்திட்​டத்​துக்​கான டெண்​டர் ஹைத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம்​தான் எரிபொருட்களை சப்ளை செய்​கிறது. ஹைட்​ரஜன் ரயிலை வடிவமைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) நடை​பெற்​றன. பணி​கள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன.

இதையடுத்​து, ரயிலை அறி​முகப்​படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது. இந்​நிலை​யில், நாட்டின் முதலாவது ஹைட்​ரஜன் ரயி​லை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரயில் 2018-ம் ஆண்​டில் இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்​பான், சீனா, அமெரிக்கா தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்​பட்ட ஹைட்​ரஜன் ரயிலை இயக்கின என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) முழு​மை​யாக வடிவ​மைக்​கப்​பட்டு தயாரிக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

அதிகபட்ச கட்டணம் ரூ.25: சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத இந்த ஹைட்​ரஜன் ரயில், ஹரி​யானா மாநிலத்தின் மின்மயமாக்கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் – சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரயில் நிலை​யங்​களை இணைக்​கும் வகை​யில் இயக்​கப்​படுகிறது. இந்த ரயில் தின​மும் 2 முறை இருமார்க்கங்களி​லும் இயக்​கப்​படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயணக் கட்​ட​ணம் மிகக் குறைவாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை மட்​டுமே நிர்ணயம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த ரயில் பாரம்​பரிய டீசல் அல்​லது மின்​சார வயர்​களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோ​வாட் ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல தொழில்​நுட்​பத்​தில் இயங்​கு​கிறது. ரயில் வேகம் எடுக்கும்போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்​பேட் பேட்டரி​களும், ரயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறுஉரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஹைட்ரஜன் ரயில் 2 ஓட்​டுநர் பெட்​டிகள், 8 பயணி​யர் பெட்டிகள் என 10 பெட்​டிகளைக் கொண்​டது. ஒரே நேரத்​தில் 2,600க்​கும் மேற்பட்ட பயணி​களை ஏற்​றிச் செல்​லும் திறன் கொண்​டது. சோதனை​யின்போது இந்த ரயில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்​டது. ஆனாலும், பாதுகாப்பான, வழக்கமான இயக்​கத்துக்​காக மணிக்கு 75 கி.மீ. வேகத்​தில் மட்​டுமே இயக்​கப்​பட உள்​ளது.

SCROLL FOR NEXT