பிரதமர் நரேந்திர மோடி
காட்வா: பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்பதால் மாநிலத்தில் உள்ள ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தயாராக இருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் பேசினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பூர்வ பர்தமான் மாவட்டத்தில் உள்ள காட்வாவில் பாஜக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சிண்டிகேட்கள் தொடர்புடைய ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய, பாஜக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடும். இது திரிணமூல் அரசாங்கத்தின் 15 ஆண்டு கால முழு விவரத்தையும் முன்வைக்கும். இத்தகைய ஒவ்வொரு குற்றத்தையும் தடுக்க பாஜக ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எங்கெல்லாம் அதிக வாக்குப்பதிவும், பெண்களின் அதிகமான வாக்குகளும் பதிவாகிறதோ, அங்கெல்லாம் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய மக்களின் தெளிவான ஆணை கிடைத்துள்ளது. கேரளாவில், எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூட உரிமை கோராத ஒரு சூழல் நிலவுகிறது. மேற்கு வங்கத்திலும், பாஜக வெற்றியை நோக்கித் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உங்கள் உற்சாகமும், செயல்பாடுகளுமே அந்த வெற்றியை உறுதி செய்கின்றன.
பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் பெருகி வரும் ஆதரவைக் கண்டு, திரிணமூல் காங்கிரஸ் பீதி அடைந்துள்ளது என்பதே உண்மை. இதனால்தான் பொய்களைக் கூறி மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ஊழல் கடையைப் பாஜக மூடிவிடும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.
மேற்கு வங்கத்தில் விரைவில் சிஏஏ அமல் செய்யப்படும். எனவே, இங்கிருக்கும் ஊடுருவல்காரர்கள் தங்களது மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தயாராக இருங்கள். அவர்கள் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மேற்கு வங்கத்தின் அனைத்து சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் ஒரு உறுதிமொழியை அளிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்கப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், தற்போதைய நலத்திட்டங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தவறான தகவல்களைப் பரப்புகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பாஜக எந்தத் திட்டத்தையும் நிறுத்தாது. திரிணமூலின் ஊழல் எனும் கடையை மட்டுமே பாஜக மூடும். திரிணமூல் காங்கிரஸின் கொள்ளையை மட்டுமே பாஜக தடுத்து நிறுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.