இந்தியா

நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் ரயில் நிலையங்களும் திறப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்​க​ உள்​ளார்.

இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் வகையி​லான ரயில் இன்​ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டுமுயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்​டத்தை 2022 ஏப்​ரலில் தொடங்​கியது.

இத்திட்​டத்​துக்​கான டெண்​டர் ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த மேதா நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம்​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது. ஹைட்​ரஜன் ரயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) நடை​பெற்​றன. பணி​கள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன.

இதையடுத்​து, ரயிலை அறி​முகப்​படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது. இந்​நிலை​யில், நாட்டின் முதலாவது ஹைட்​ரஜன் ரயி​லைபிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரயில் 2018-ம் ஆண்​டில் இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்​பான், சீனா, அமெரிக்கா தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்​பட்ட ஹைட்​ரஜன் ரயிலை இயக்​கின என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) முழு​மை​யாக வடிவ​மைக்​கப்​பட்டு தயாரிக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

அதிகபட்ச கட்டணம் ரூ.25: சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத இந்த ஹைட்​ரஜன் ரயில், ஹரி​யானா மாநிலத்தின் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் – சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரயில் நிலை​யங்​களை இணைக்​கும் வகை​யில் இயக்​கப்​பட​ உள்​ளது. இந்த ரயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்​படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயணக் கட்​ட​ணம் மிகக் குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை மட்​டுமே நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த ரயில் பாரம்​பரிய டீசல் அல்​லது மின்​சார வயர்​களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோ​வாட் ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல தொழில்​நுட்​பத்​தில் இயங்​கு​கிறது. ரயில் வேகம் எடுக்​கும்​போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்​பேட் பேட்​டரி​களும், ரயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறுஉரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

ஹரி​யா​னா​வின் ஜிந்த் ரயில் நிலை​யத்​தில் தொடக்க விழா நிகழ்ச்​சிகள் நடை​பெறவுள்​ளன.இந்த ரயில் அறி​முக நிகழ்ச்​சி​யுடன் ரூ.14,700 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​கள், பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​தல் போன்ற நிகழ்ச்​சிகளி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார்.பின்னர், ஹரி​யா​னா​வில் ரூ.12,470 கோடி, சண்டிகரில் ரூ.4,700 கோடி, பஞ்சாபில் ரூ.5,470 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித்​ திட்​டங்​களையும் பிரதமர் தொடங்​கி வைக்​க உள்​ளார்​.

பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ள ஹைட்ரஜன் ரயில் 2 ஓட்​டுநர் பெட்​டிகள், 8 பயணி​யர் பெட்​டிகள் என 10 பெட்​டிகளைக் கொண்​டது. ஒரே நேரத்​தில் 2,600-க்​கும் மேற்பட்ட பயணி​களை ஏற்​றிச் செல்​லும் திறன் கொண்​டது. சோதனை​யின்போது இந்த ரயில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்​டது. ஆனாலும், பாது​காப்​பான, வழக்கமான இயக்​கத்துக்​காக மணிக்கு 75 கி.மீ. வேகத்​தில் மட்​டுமே இயக்​கப்​பட உள்​ளது.

9 ரயில் நிலையங்கள் திறப்பு: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்,தெற்கு ரயில்வேயில் ரூ.14.79 கோடியில் சென்னை பூங்கா, ரூ.15.14 கோடியில் சின்னசேலம், ரூ.12.18 கோடியில் குன்னூர் மற்றும் கேரளாவில் தலசேரி, திரூர், பரப்பனங்காடி, காலடி ரயில் நிலையத்துக்காக அங்கமாலி, சாலக்குடி, நிலம்பூர் என 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

முதியவர்கள், நோயாளிகளின் நலன் கருதி இந்த நிலையங்களில் புதிய எஸ்கலேட்டர்கள், லிப்ட்வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் பிரத்யேக சாய்தளப் பாதைகள், பிரெய்லி வழித்தடங்கள், சிறப்பு கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பு 4.5 மீட்டராக இருந்த நடைமேடை மேம்பாலங்கள், 12 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT