இந்தியா

“நாட்டை வழிநடத்த தன்னைத் தவிர வேறு யாருமில்லை என மோடி நினைக்கிறார்” - ராகுல் விமர்சனம்

மோகன் கணபதி

பாலக்காடு (கேரளா): ‘‘இந்தியாவை வழிநடத்த தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அதேபோல், கேரளாவை வழிநடத்த தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பினராயி விஜயன் நினைக்கிறார்’’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு பாலக்காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ‘‘இந்தியாவை வழிநடத்த தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நினைக்கும் ஒரு நபர் டெல்லியில் இருக்கிறார். அதேபோல், கேரளாவை வழிநடத்த தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நினைக்கும் ஒரு நபர் இங்கே இருக்கிறார். இவர்களின் ஆணவத்தைப் பாருங்கள். இவர்கள் இருவரும் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள்.

          

இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சார விளம்பரம் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா? அதில் கேரள முதல்வரின் படத்தின் கீழே வேறு யார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அவரைத் தவிர வேறு யாராலும் கேரளத்தை நிர்வகிக்க முடியாது என்பது போன்ற ஒரு தோற்றத்தை அந்த விளம்பரம் உருவாக்குகிறது.

பிரதமர் மோடி பேசும்போதெல்லாம் கடவுள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பேசுகிறார். ஆனால், கேரளாவின் சபரிமலை குறித்தோ அல்லது சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் குறித்தோ அவர் பேசுவதில்லை.

நான் பாஜகவை எதிர்த்துப் போராடுகிறேன். அமலாக்கத் துறையினரால் 55 மணி நேரம் விசாரிக்கப்பட்டேன். தற்போதும்கூட நான் பிணையில்தான் வெளியே உள்ளேன். எனது மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, பாஜகவின் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் முக்கிய இலக்காக நான் இருக்கிறேன்.

ஆனால், கேரள முதல்வர் நடத்தப்படும் விதத்தைப் பாருங்கள். பாஜக ஏன் கேரள முதல்வரை தாக்குவதில்லை? ஏன் அவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படுவதில்லை? கேரள முதல்வர் ஊழல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி இங்கு வரும்போது சபரிமலை கோவில் குறித்தோ அல்லது தங்கம் திருடப்பட்டது குறித்து அவர் பேசுவதில்லை. ஏனெனில், அவர் கேரள முதல்வரை பாதுகாக்க விரும்புகிறார்’’ என தெரிவித்தார்.

கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகள் களத்தில் உள்ளன. கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT