புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு அமல் செய்வதைத் தடுப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் நேற்று அவர் பேசியதாவது: முதலில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம். அதன்பிறகு உள்ஒதுக்கீடு குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கலாம். மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாக்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. நமது நாட்டின் நலன், பெண்களின் முன்னேற்றம் என்ற பரந்த கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றினோம். இதேபோல மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாக்களையும் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சிகளும் மசோதாக்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் அரசியல் கண்ணோட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை அணுகக்கூடாது.
மிக நீண்ட காலமாக மகளிருக்கான உரிமை வழங்கப்படாமல் உள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் அவர்களுக்கான இடஒதுக்கீடு உரிமையை வழங்க வேண்டும். எங்களால்தான் மகளிர் இடஒதுக்கீடு அமல் செய்யப்படுகிறது என்ற அங்கீகாரத்தை எதிர்க்கட்சிகள் கோரினால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் பாஜகவுக்கு எவ்வித அரசியல் ஆதாயமும் தேவையில்லை.
மசோதாக்கள் நிறைவேறிய பிறகு மத்திய அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்படும். அதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரின் புகைப்படங்களும் அச்சிடப்படும் என்று உறுதி அளிக்கிறேன். மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை எதிர்ப்பவர்களை, நமது நாட்டு பெண்கள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். அவர்களை பெண்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.
தமிழில் வாக்குறுதி மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கையில் மாநிலங்களின் விகிதாச்சாரத்தில் மாற்றம் இருக்கக்கூடாது என்று வாக்குறுதி அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றனர். இதற்கு நான் தயார். குறிப்பாக, இதுதொடர்பாக தமிழில் பொருத்தமான வார்த்தைகள் இருந்தால், அந்த வார்த்தையை கூறி வாக்குறுதி அளிக்கவும் தயாராக உள்ளேன். நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு நாட்டை பிளவுப்படுத்த அரசியலமைப்பு நமக்கு உரிமை அளிக்கவில்லை. ஒரே தேசம் என்ற அடிப்படையில் நாம் பதவிப் பிரமாணம் மேற்கொண்டோம். காஷ்மீராக இருந்தாலும், கன்னியாகுமரியாக இருந்தாலும் அவற்றை தனி பிரதேசங்களாக சிந்திக்க முடியாது.
தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என எந்த பகுதியாக இருந்தாலும், சிறிய மாநிலங்களாக இருந்தாலும் எவ்வித பாகுபாடும் கிடையாது, தொகுதி மறுவரையறை செயல்முறை மாற்றப்படாமல் தொடரும். தற்போது நடைமுறையில் உள்ள விகிதாச்சாரம் அப்படியே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.