இந்தியா

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பணிந்து போகிறார் பிரதமர் மோடி” - எல்பிஜி விலை உயர்வுக்கு பிரியங்கா கண்டனம்

வெற்றி மயிலோன்

கொல்லம்: சமையல் எரிவாயு மற்றும் பிற எரிபொருட்களின் விலை உயர்ந்திருக்கும் சூழலில், “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பணிந்துபோகிறார்" என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கொல்லத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அனைத்தும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் வர்த்தகம் மேற்கொள்வது மேலும் கடினமாகப் போகிறது.

இவை அனைத்துக்கும் மத்தியில், நரேந்திர மோடியின் தலைமையிலான நமது மத்திய அரசின் கொள்கை என்ன? அவர் தனது மக்களுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் செய்துகொண்டிருப்பது எல்லாம் அமெரிக்காவுக்கு பணிந்துபோவதும், இஸ்ரேலுக்கு பணிந்துபோவதும் மட்டுமே.

          

பிரதமர் மோடி சமரசத்துக்கு உள்ளாகிவிட்டார்; அதனால்தான் அவர் ட்ரம்ப்புக்கு பணிந்துபோகிறார். இதற்கெல்லாம் யார் விலை கொடுக்கிறார்கள்? நீங்கள்தான் விலை கொடுக்கிறீர்கள். விலை உயர்வை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலுக்கு நீங்கள்தான் விலை கொடுக்கிறீர்கள்.

உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்; ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால், அவர்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை.

இன்றைய சூழலில் கேரளாவுக்கு ஒரு புதிய வகை அரசியலும், புதிய நிர்வாகமும் தேவை. உங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது உங்கள் உரிமை; வேலைவாய்ப்புகளைப் பெறுவது உங்கள் உரிமை. அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் சிறந்த ஊதியத்தைப் பெறுவதும் அவர்களின் உரிமை" என்று அவர் மேலும் கூறினார்.

கொல்லம் தொகுதியில் யுடிஎஃப், எல்டிஎஃப் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் இருமுறை வெற்றி பெற்றவருமான எம். முகேஷை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி பிந்து கிருஷ்ணாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதாப் குமார் போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT