கோப்புப் படம்

 
இந்தியா

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு - முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, ஹார்முஸ் ஜலசந்தி சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அதிபர் மசூத் பெஷெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசி, ரமலான் மற்றும் நவ்ரூஸ் (புத்தாண்டு) வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பிக்கையை தெரிவித்தேன்.

பிராந்திய ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாகவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் உள்ள பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தேன்.

          

கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் கப்பல் வழித்தடங்கள் திறந்தும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதையும் மீண்டும் வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு ஈரான் அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்தேன்’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மசூத் பெஷெஷ்கியான் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘இஸ்லாமிய நாடுகளுக்கும் எங்கள் அன்பு அண்டை நாடுகளுக்கும் நாங்கள் சொல்லிக் கொள்வது இதுதான், நீங்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் உங்களுக்கு எதிராக எந்தவொரு கடுமையான மோதலிலும் ஈடுபடவில்லை.

எங்கள் எதிராக இருப்பது சியோனிச அமைப்பு (இஸ்ரேல்) மட்டும்தான். அல்லாவின் தூதரின் போதனைகளின்படி செயல்படவும், அல்லா எங்களுக்கு வலிமையையும் ஒற்றுமையையும் வழங்குமாறும் இந்த ரமலான் தினத்தில் பிரார்த்திக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT