ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த இரு நாட்டு பிரதமர்கள்

 
இந்தியா

அயோத்தி - ஜனக்பூர் ரயில் சேவை: இந்திய, நேபாள பிரதமர்கள் தொடங்கி வைத்தனர்

ராமர், சீதை பிறந்த இடங்களை இணைக்கும்...

மோகன் கணபதி

புதுடெல்லி: அயோத்திக்கும், நேபாளத்தின் ஜனக்பூருக்கும் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ராமர் பிறந்த அயோத்தியிலும், சீதை பிறந்த ஜனக்பூரிலும் இருவருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்கள் உள்ளன. இரண்டுமே ஆன்மிக சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற இடங்களாக திகழ்கின்றன. இவ்விரு தலங்களையும் இணைக்கும் வாராந்திர ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சரயு - கமலா எக்ஸ்பிரஸ் எனும் இந்த ரயில், கோரக்பூர், பஸ்தி, ரக்ஸால், சீதாமர்ஹி, மதுபானி, ஜெயநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் சேவை ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்பதால், இந்த பகுதியில் உள்ள உணவகங்கள், உள்ளூர் போக்குவரத்துச் சேவைகள், சிறு வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ரயில் சேவை குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியா - நேபாளம் இடையேயான கலாச்சாரம் மற்றும் நட்பை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் இணைந்து காணொளி காட்சி வாயிலாக சரயு - கமலா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளனர்.

சரயு நதி நீரால் புனிதமடைந்த அயோத்தி ராமர் கோயிலையும், அன்னை கமலாவின் நீரால் புனிதமடைந்த அன்னை ஜானகியின் பிறப்பிடமான ஜனக்பூரையும் இணைக்கும் இந்த ரயில் சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான கலாச்சார பாரம்பரியத்தையும், ஆழமான நட்புறவையும் பறைசாற்றுவதுடன் பாரம்பரியமும் வளர்ச்சியும் இணையும் ஒரு சிறப்பான அடையாளமாகவும் திகழும்.

இந்திய ரயில்வே மூலம் இரண்டு புனிதத் தலங்களை இணைக்கும் இந்த முன்னெடுப்புக்காக பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிமக்களுக்கும் எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT