கோலாலம்பூர்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) மலேசியா, சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இணைந்து பிரிட்டிஷ் படைக்கு எதிராக வீர, தீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர் உயிரோடு உள்ளனர்.
தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய நேதாஜி நல அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளையில் ஐஎன்ஏ படை வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் வாரிசுகள் உறுப்பினர்களாக உள்ளனர். கோலாலம்பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்கட்டளை நிர்வாகிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குறிப்பாக ஐஎன்ஏ வீரர் ஜெயராஜ் ராஜா ராவுடன் அவர் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதோடு அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ”ஐஎன்ஏ வீரர் ஜெயராஜ் ராஜா ராவை சந்தித்ததை முக்கிய நிகழ்வாக கருதுகிறேன். அவர், வீரம், தியாகத்தின் அடையாளமாக விளங்குகிறார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அவரது ஐஎன்ஏ படையில் இருந்த வீரமிக்க பெண்கள், ஆண்களுக்கு மரியாதை செலுத்த நாம் கடமைப்பட்டு உள்ளோம். அவர்களின் வீரமே, இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐஎன்ஏ வீரர் ஜெயராஜ் ராஜா ராவ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் அற்புதமான தருணம். அவர் மிகவும் இளமையாக இருக்கிறார். நேதாஜி உடனான எனது பயணம் குறித்து அவர் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்தார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து நாங்கள் பேசினோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த உறுதியுடன் இருக்கிறார்.
குறிப்பாக இந்திய கிராமங்களை முன்னேற்ற வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும். அனைத்து இந்தியர்களின் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார். இவ்வாறு ஜெயராஜ் ராஜா ராவ் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய அமைச்சர்கள் கோவிந்த் சிங் தியோ, ரமணன் ராமகிருஷ்ணன், குலசேகரன், யுனேசுவரன் உள்ளிட்டோரையும் பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூரில் நேற்று சந்தித்துப் பேசினார்.