புதுடெல்லி: “தீவிரவாதத்துக்கு் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன்படி 138-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-29 தேதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த முகாம்கள் மீது துல்லியத்தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உலத்துக்குத் தெளிவாக எடுத்துரைத்தோம்.
பாலகோட் (பாகிஸ்தான்) மீதான விமானத் தாக்குதல் தொடங்கி, ஆபரேஷன் சிந்தூர் வரை இந்திய வீரர்கள் தங்களது வீர, தீரத்தைப் பறைசாற்றி வருகின்றனர். தற்போது தீவிரவாதிகள் ஏறெடுத்துப் பார்த்தால்கூட அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்தி உள்ளோம்.
கடந்த 2008 செப்டம்பர் 13-ம் தேதி டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். சில வாரங்கள் கழித்து நவம்பர் 26-ம் தேதி மும்பையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது மிகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தீவிரவாதத்துக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக நீங்கள் 15 முதல் 20 நிமிடங்களை ஒதுக்க வேண்டும். உங்களுடைய விவரங்களை மொபைல் போன் வாயிலாகநீங்கள் பதிவு செய்ய முடியும்.
தமிழகத்தின் மணப்பாறையைச் சேர்ந்த தமிழ்த் துறை பேராசிரியர் செல்வராஜ் பழங்கால சிற்பங்கள் மற்றும் கோயில்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்கும் உன்னத முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க இதுபோன்ற தனித்துவமான முயற்சிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
குஜராத்தின் சோமநாதர் கோயில் மீது கஜினி முகமது தாக்குதல் நடத்தினார். அந்தக்கோயில் தற்போது கம்பீரமாகக்காட்சியளிக்கிறது. இந்த ஆண்டை நாம் சோமநாதர் சுயமரியாதை விழாவுடன் தொடங்கினோம். கி.பி. 1026-ல் கஜினி முகமது படையினரால் சோமநாதர் கோயில் அழிக்கப்பட்ட அதே ஆண்டில் குஜராத்தின் புகழ்பெற்ற மொதேரா சூரியக் கோயிலும் இடிக்கப்பட்டது.
மொதேரா சூரியக் கோயில்: எனினும், முதலாம் பீமதேவன், கஜினி முகமதுவை எதிர்த்து நின்றது மட்டுமல்லாமல், குறுகிய காலத்துக்குள்ளேயே மொதேரா சூரியக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பவும் செய்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோயிலுக்கு ஒரு முறையாவது நீங்கள் வருகை தர வேண்டும்.
கடந்த 1926-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி அசோக் சிங்கால் பிறந்தார். விஎச்பி மூத்த தலைவரான அவரது முயற்சியால் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் வியாபித்து பரவி உள்ளது. அவருடைய நூற்றாண்டு பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியைக் கொண்டாட உள்ளோம். அவர் நமக்கு பல்வேறு வாழ்க்கை தத்துவங்களை அளித்துள்ளார். அவற்றில் முக்கியமானது தூய்மை. காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி மத்திய பிரதேசத்தில் சில இளைஞர்கள் நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் சில இளைஞர்கள் பழைய குளங்களைத் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். மும்பையில் சில இளைஞர்கள் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற தூய்மைப் பணிகளே காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.
போதை ஒழிப்பு இயக்கம்: லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்த இயக்கமானது 100 வாரங்கள் வரை நடத்தப்படும். ‘மை பாரத்’தின் தன்னார்வலர்களும் இயக்கத்தில் உள்ளனர். அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். போதைப் பழக்கத்தில் இருந்து வெளியேற விரும்புவோருக்கு நாம் துணை நிற்க வேண்டும்.
போதையில்லா இளைஞர்கள், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஏ.செல்வராஜ்
மணப்பாறை பேராசிரியருக்குப் பாராட்டு
வானொலி உரையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசுக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஏ.செல்வராஜை பிரதமர் மோடி பாராட்டி பேசினார். இதுகுறித்து பேராசிரியர் செல்வராஜ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: கல்லூரி மாணவி பூபதி மணப்பாறை அருகே கீழப்பளுவஞ்சி எனும் ஊரில் வீரக் கல் இருப்பதைத் தெரிவித்தார். அங்குச் சென்று ஆய்வு செய்த போது 3 வீரக்கற்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
வீரக்கல் என்பது ஒரு ஊரை, ஊரின் நீர் நிலைகளைப் பாதுகாப்பது போன்ற பொதுவான பணிகளில் ஈடுபட்டு உயிர் நீத்தவருக்கு வைக்கப்படும் சிற்பம் ஆகும். இதுபோல பல இடங்களில் ஆய்வு செய்து பழங்கால சிற்பங்கள்,கோயிலை கண்டறிந்தோம். அவற்றைத் தொடர்புபடுத்தி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தேன். ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் மேலும் நிறைய உள்ளன. எத்தனையோ நிபுணர்கள் உள்ள நிலையில், சாமானியரான என்னைப் பிரதமர் பாராட்டி பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு செல்வராஜ் கூறினார்.