இந்தியா

ஹைட்ரஜன் ரயிலை தொடங்கினார் மோடி: 75 நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

முதன்முதலாக தயாரித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரி​யா​னா​வின் ஜிந்த் நகர் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். பஞ்​சாபின் ஜலந்​தரில் நடை​பெற்ற விழா​வில் அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் புதுப்​பிக்​கப்​பட்ட சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட 75 ரயில் நிலை​யங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

ஹரி​யா​னா​வின் ஜிந்த் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடைபெற்ற விழா​வில் நாட்​டின் முதலாவது ஹைட்​ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை தயாரித்ததன் மூலம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலை, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த ரயில் ஜிந்த்- சோனிபட் நகரங்​களுக்கு இடையே இயக்​கப்பட உள்​ளது.

பின்​னர், ஹிந்த் நகரின் ஏகலைவா மைதானத்​தில் நடை​பெற்ற விழா​வில் ரூ.14,700 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை பிரதமர் தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பிற்​பகலில் சண்​டிகரில் நடை​பெற்ற விழா​வில் ரூ.6,600 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார். பின்​னர் பஞ்​சாபின் ஜலந்​தர் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்​திர மோடி ரூ.5,470 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். அப்​போது அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் புதுப்​பிக்​கப்​பட்ட சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உட்பட 75 ரயில் நிலை​யங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். ஜலந்​தரில் நடை​பெற்ற விழா​வில் ஆம் ஆத்​மியை சேர்ந்த பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் பங்​கேற்​க​வில்​லை.

ஹரி​யா​னா, பஞ்​சாபில் நேற்று ஒரே நாளில் ரூ.26,800 கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் தொடங்​கப்​பட்​டன. இந்த நலத்​திட்ட விழாக்​களில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயில் ஹரி​யா​னா​வுக்கு கிடைத்​திருக்​கிறது. இந்த ரயில் முழு​மை​யாக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்​டிருப்​பது மிகுந்த பெரு​மிதம் அளிக்​கிறது. இதன்​மூலம் இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப திறன் மீண்​டும் ஒரு​முறை நிரூபிக்​கப்​பட்டு உள்​ளது. சர்​வ​தேச அளவில் 4 நாடு​களிடம் மட்​டுமே ஹைட்​ரஜன் எரிசக்தி தொழில்​நுட்​பம் இருக்​கிறது. இந்த பட்​டியலில் இந்​தி​யா​வும் இணைந்​திருக்​கிறது.

மத்​தி​யில் பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு கடந்த 12 ஆண்​டு​களில் ரயில்வே துறையை மின்​மய​மாக்​கும் திட்​டம் தீவிரப்​படுத்​தப்​பட்​டது. தற்​போது 99 சதவீத ரயில்​கள் மின்​சா​ரத்​தில் இயக்​கப்​படு​கின்​றன. நாடு முழு​வதும் 1.75 லட்​சம் ஆயுஷ்​மான் ஆரோக்​கிய மந்​திர்நிலை​யங்​கள் செயல்​படு​கின்​றன. இந்த மருத்​துவ மையங்​கள் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​கள் பயன் பெறுகின்​றனர். மருந்து உற்​பத்தி மற்​றும் மருத்​துவ சுற்​றுலா​வின் தலைநக​ராக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது. கடந்த 12 ஆண்​டு​களில் மட்​டும் புதி​தாக 15 எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​கள் தொடங்​கப்​பட்டுள்​ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை பின்தங்கிய நிலையில் இருந்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

ரூ.5 முதல் ரூ.25 வரையிலான கட்டணத்திலேயே பயணிக்கலாம்

ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளும் அடுத்தடுத்து ஹைட்ரஜன் ரயில்களை அறிமுகம் செய்தன. 1976-ல் இந்தியாவில் ஹைட்ரஜன் எரிசக்தி தொடர்பான ஆய்வு தொடங்கியது.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஹைட்ரஜன் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2023-24-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களை உள்நாட்டில் தயாரிக்க ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் 10 பெட்டிகளைக் கொண்டது.

இது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும். 2,600 பேர் வரை பயணம் செய்ய முடியும். ரயிலின் இன்ஜின் பெட்டியில் ஹைட்ரஜன் சிலிண்டர், மின்கலம், பேட்டரி, மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன. சிலிண்டரில் 440 கிலோ ஹைட்ரஜன் எரிவாயு அடைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து மின் கலத்துக்குள் ஹைட்ரஜன் எரிவாயு செலுத்தப்படும். மின் கலத்தில் ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் பேட்டரியில் சேமித்து வைக்கப்படும்.

பேட்டரியில் இருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் மின்மோட்டார் இயங்கி, ரயில் ஓடும். இந்த ரயில் 3,200 குதிரைத் திறன் கொண்டது. ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே தினமும் 2 முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ஹைட்ரஜன் உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக உள்ளது. எனினும், ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT