குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சனந்தில் கெய்ன்ஸ் செமி கண்டக்டர் ஆலையை நேற்று திறந்து வைத்த பிரதமர் மோடி உற்பத்தி செயல்பாடுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.படம்: பிடிஐ
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில், கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் ரூ.3,300 கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்திய செமி கண்டக்டர் திட்டத்தின் (ஐஎஸ்எம்) கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில், மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்துக்கு அடுத்தபடியாக வணிகரீதியிலான உற்பத்தியைத் தொடங்கும் 2-வது பெரிய ஆலை இதுவாகும். இது, இந்தியாவின் உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதோடு, சிப் உற்பத்தியில் நமது நாட்டை உலகளவில் முக்கிய மையமாக மாற்றுவதற்கான இலக்கை அடைவதை துரிதமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கெய்ன்ஸ் செமிகான் ஆலை திறப்பு, தற்சார்பு இந்தியா நோக்கிய நமது பயணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது நாட்டில் வலுவான செமி கண்டக்டர் உற்பத்திச் சூழலை உருவாக்குவதில் ஒரு மைல்கல்லாகும். இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செமி கண்டக்டர் கட்டமைப்பு எந்த வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஆலையைத் தொடங்கி வைத்த பிறகு, அங்கு பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
தினமும் 63 லட்சம் யூனிட்: இந்த ஆலையில் முதற்கட்டமாக மேம்படுத்தப்பட்ட ‘இன்டெலிஜென்ட் பவர் மாட்யூல்’ (ஐபிஎம்) உற்பத்தி செய்யப்படவுள்ளது. இவை வாகனங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்குத் தேவையான முக்கியமான பாகங்களாகும். ஒவ்வொரு மாட்யூலிலும் 17 சிப்கள் இருக்கும். இவை கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆல்பா மற்றும் ஒமேகா செமி கண்டக்டர் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த ஆலையின் அனைத்துக் கட்டப் பணிகளும் நிறைவடையும் போது, நாளொன்றுக்கு 6.33 மில்லியன், அதாவது சுமார் 63 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விளங்கும்.
ஜெயின் அருங்காட்சியகம்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள கோபா தீர்த்தத்தில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
அசோகரின் பேரனும் அகிம்சை மற்றும் சமண மதத்தைப் பரப்புவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான சாம்ராட் சம்பிரதியின் பெயரால் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், சமண மதத்தின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகப்பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது.
விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “சுதந்திரத்துக்குப் பிறகு, கையெழுத்துப் பிரதிகளைத் தேடிக் கண்டறிவதும், அவற்றைப் பாதுகாப்பதும் ஒரு தேசியப் பொறுப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, காலனித்துவ மனப்பான்மையின் காரணமாக, இதற்கு எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. முன்பு இத்தகையப் பணிகள் அரசியல் கண்ணோட்டத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. நாங்கள் அந்த மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார்.