புவனேஸ்வர்: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் மும்பை அலுவலகத்துக்கு சேதம் ஏற்பட்டால் நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும். எனவே மாற்று ஏற்படாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 18.55 ஏக்கர் பரப்பில், ரூ.169 கோடி செலவில் ஆர்பிஐ தரவு மையம், சைபர் பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மும்பை தலைமை அலுவலகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், புவனேஸ்வர் மையம் மூலம் ரிசர்வ் வங்கி தொடர்ந்து செயல்படும். வங்கிச் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த புதிய மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்கள் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமங்கள், சிறிய நகரங்களின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஏழை குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதிலும் மத்திய அரசின் திட்டங்கள் கடைநிலை மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதிலும் மிகவும் உறுதியாக உள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக நாட்டின் வங்கிச் சேவை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் கடன்களை பெற்றனர்.
அதேநேரம் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் வங்கிக் கணக்குகளை தொடங்கக்கூட உத்தரவாதம் கோரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட வங்கிக் கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்தப்படாததால் ஒட்டுமொத்த வங்கி நிர்வாகமும் பாதிக்கப்பட்டது. நவீன கால போர்களில் சைபர் தாக்குதல்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.
சைபர் கிரிமினல்கள், சைபர் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டின் வங்கி நிர்வாகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் அமைக்கப்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கியின் புதிய தரவு மையம் நாட்டின் வங்கி நிர்வாகப் பாதுகாப்பை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.