புதுடெல்லி: நமோ பாரத் அதிவேக ரயில் வழித்தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
நாட்டின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பின் (RRTS), டெல்லி - மீரட் இடையிலான நமோ பாரத் வழித்தடத்தின் பெரும்பகுதி ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த மீதமுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் அதிவேக மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் சேவையை பச்சைக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் அந்த ரயிலில் பயணம் செய்த மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பங்கஜ் சவுத்ரி மற்றும் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொண்டு பிரதமருடன் பயணித்தனர். இதையடுத்து, மீரட்டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்பில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தத் திட்டங்கள், இப்பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மீரட் மெட்ரோ மற்றும் விரிவாக்கப்பட்ட நமோ பாரத் ரயில் சேவைகளின் தொடக்கமானது, மேற்கு உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் மண்டல இணைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
82 கி.மீ நீளம் கொண்ட டெல்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தில், டெல்லியின் சராய் காலே கான் மற்றும் நியூ அசோக் நகர் இடையே 5 கி.மீ. பகுதியும், உத்தர பிரதேசத்தின் மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் இடையே 21 கி.மீ பகுதியும் அடங்கும்.
இந்த ரயில்கள் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் அதிவேக ரயில்களில் ஒன்றாக அமைகிறது. டெல்லி மற்றும் சாகிபாபாத், காசியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களுக்கு இடையே வேகமான மற்றும் தடையற்ற பயணத்தை வழங்குவதை இந்த வழித்தடம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தரம் தாழ்ந்த காங்கிரஸ் - உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மோடி இது குறித்து கூறியதாவது: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் திடீரென அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் சட்டை இல்லாமல் போராட்டம் நடத்தியது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமின்றி அறுவறுக்கத்தக்கது. ஒரு உலகளாவிய நிகழ்வை காங்கிரஸ் தனது அழுக்கு மற்றும் நிர்வாண அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அவர்களின் இந்தப் போராட்டம் மிக பழமையான காங்கிரஸ் கட்சி கருத்தியல் ரீதியாக எவ்வளவு வலுவிழந்து வறிய நிலையில் உள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.
நீங்கள் ஏற்கெனவே அரசியல் ரீதியாக நிர்வாணமாகத்தான் இருக்கிறீர்கள். பிறகு ஏன் ஆடைகளை கழற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாட்டின் பழமையான காங்கிரஸ் கட்சி திவாலாகிவிட்டது. காங்கிரஸ் தனது சொந்த நாட்டையே அவதூறு செய்வதில் மும்முரமாக உள்ளது. நாட்டிற்குள் இருக்கும் சில அரசியல் கட்சிகளால் இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை.
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய ஏஐ மாநாட்டை நாம் நடத்தினோம். அது ஒன்றும் பாஜகவின் சொந்த நிகழ்ச்சி அல்ல. ஆனால் காங்கிரஸும் அதன் ஆதரவாளர்களும் என்ன செய்தார்கள்? இந்தியாவுக்கான ஒரு உலகளாவிய நிகழ்வை அவர்கள் தங்களது அற்ப அரசியலுக்கான தளமாக மாற்றிக்கொண்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.