புனே: புனே நகரில் நிறுவப்பட்டுள்ள 3-வது மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ‘பிங்க் லைன்’ என அழைக்கப்படும் 3-வது மெட்ரோ ரயில் பாதைத் திட்டம் ரூ.8,300 கோடியில் 23 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று பகல் 12.30 மணிக்கு இந்த மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
புனேயின் நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து புனேயில் 2-வது கட்டமாக 4 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இது ரூ.21,800 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: 2014-ம் ஆண்டில் நம் நாட்டில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் தூரம் 248 கிலோமீட்டராக மட்டுமே இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்டிஏ) பொறுப்பேற்ற பின்னர் மெட்ரோ திட்டங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம்.
இதனால் தற்போது 12 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் அசுர வளர்ச்சி பெற்று 1,200 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. மேம்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.
2014-ல் என்டிஏ கூட்டணிக்கு மக்கள் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியபோது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எளிதான வாழ்க்கை மற்றும் எளிதான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நாங்கள் செயல்படத் தொடங்கினோம். அதன்படி தற்போது நடந்து வருகிறோம். புனே நகரில் மெட்ரோ ரயில் திட்டம் இந்நகர மக்களுக்கு வரப்பிரசாதம் போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.
புனே நகரில், இந்த ரயில் திட்டமானது ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் அன்றாடப் பயணத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹிஞ்சேவாடி ஐடி ஹப் ஸ்டேஷன் முதல் மாவட்ட நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் வரை இந்த மெட்ரோ ரயில் இயங்கும்.
பெண்களே இயக்கும் ரயில்
இந்த ‘பிங்க் லைன்’ மெட்ரோ ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தையும் பெண் ஓட்டுநர்களே இயக்குவார்கள். மெட்ரோ ரயிலுக்கான மின் தேவையில் 30% சூரிய ஒளி ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யப்படும். புனே 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும். இவை நகரின் முக்கிய பகுதிகளை இணைக்க உள்ளது.