புதுடெல்லி: தலைநகர் டெல்லி - மீரட் இடையிலான 82 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தியாவின் முதல் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் பாதையில் எஞ்சியிருந்த பகுதிகளிலும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (பிப்.22) தொடங்கி வைத்தார். இதே போல 23 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மீரட் மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தற்போது டெல்லி சாராய் கலே கான் முதல் நியூ அசோக் நகர் வரையிலான 5 கிலோமீட்டர் மற்றும் மீரட் தெற்கு முதல் மோதிபுரம் வரையிலான 21 கிலோமீட்டர் பகுதியையும் இந்த நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் இணைக்கிறது. இதன் மூலம் டெல்லியில் இருந்து மீரட் நகருக்கு ஒரு மணி நேரத்தில் பயணிக்கலாம். இந்த ரயிலின் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் இயக்கப்படும்.
இன்று நடைபெற்ற இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி உடன், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி பிராந்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் இருந்தனர். ஷதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு வரையில் பிரதமர் மோடி ரயிலில் பயணித்தார். அவருடன் பயணித்த அதிகாரிகள் நமோ பாரத் ரயில் திட்டம் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர். அப்போது சக பயணிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக காசியாபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அங்கிருந்து மீரட் சென்று நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவை மற்றும் மீரட் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.12,930 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பொதுக்கூட்டம் ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார்.
நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில்: தலைநகர் டெல்லியில் இருந்து சாஹிபாபாத், காசியாபாத், மோதிநகர், மீரட் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த பகுதிகளுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கிலும் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
மீரட் மெட்ரோ: இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை மீரட் மெட்ரோ வழங்குகிறது. அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை மீரட் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இந்தியாவிலேயே நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில், மெட்ரோ ரயில் என இரண்டும் ஒரே தடத்தில் பயணிக்கும் வகையில் மீரட் மெட்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மெட்ரோ தடத்தில் 13 ரயில் நிலையங்கள் உள்ளன. 30 நிமிடத்தில் பயண தூரத்தை மீரட் மெட்ரோ ரயில் சேவை நிறைவு செய்கிறது.