பிரதமர் மோடி
புதுடெல்லி: பொது நலனுக்கு முக்கியத்துவம் அளித்து குடிமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று, 20-வது வேலைவாய்ப்பு திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
மத்திய அரசு நடத்தும் 20-வது வேலைவாய்ப்பு திருவிழா (ரோஜ்கார் மேளா) நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் நிதிச் சேவைகள், ரயில்வே, உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பாதுகாப்பு உள்ளிட்ட மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதிதாக பணியில் சேர உள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த திருவிழாவை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய நியமனங்களுடன், வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் மூலம், இதுவரை வழங்கப்பட்டுள்ள பணி நியமன ஆணைகளின் எண்ணிக்கை சுமார் 12.75 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு துறைகளில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்குடன், வளர்ச்சியடைந்த, தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் புதிய பணியாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். குடிமக்களின் நம்பிக்கையே அரசின் உண்மையான பலம்.
ஓய்வூதியதாரர்கள், உதவித் தொகைக்காக காத்திருக்கும் மாணவர்கள், அரசு நலத்திட்டப் பலன்களை எதிர்பார்க்கும் விவசாயிகள் உள்ளிட்டோர், பெரும்பாலும் அரசு அதிகாரிகள் மூலமாகவே அரசை அணுகுகின்றனர். உங்களது நடத்தை, தொடர்ச்சியான செயல்பாடு, திறன், நேர்மை ஆகியவையே மக்களுக்கு அரசு வழங்கும் சேவை அனுபவத்தை தீர்மானிக்கும். தங்களுக்கோ தங்களது குடும்பத்தினருக்கோ அரசு சேவைகளைப் பெறுவதில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்களை அகற்ற புதிய பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை, ஸ்கில் இந்தியா, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், விரிவுபடுத்தப்பட்ட தொழிற்பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்டவை கல்வி மற்றும் திறன்களை தொழில் துறையின் தேவைகளுடன் இணைக்க உதவுகின்றன.
பிரதமரின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தகுதி மாற்றுத் திட்டத்தின் கீழ் (PM-SETU), 1,000 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.60,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 50%, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன. சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களின் தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பங்களிப்பு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
சுமார் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் ‘பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்’ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும்.
சுமார் 40 நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், இந்திய தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகள் மற்றும் வர்த்தக கூட்டாண்மைகளை உருவாக்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
புதிய அரசு ஊழியர்கள் தங்களது பணியை நாட்டுக்குச் செய்யும் சேவையாகக் கருதி, திறன், நேர்மை மற்றும் குடிமக்களுக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறையுடன் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.