புதுடெல்லி: நாடு முழுவதும் 45 இடங்களில் நேற்று வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி முறையில் பங்கேற்று 61,000 பேருக்கு மத்திய அரசு வேலைக்கான நியமன கடிதங்களை வழங்கினார்.
மத்திய அரசு சார்பில் ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களுக்கு நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். மற்ற மாநிலங்களில் அமைச்சர்கள் நியமன கடிதங்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் 18-வது வேலைவாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் 45 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி முறையில் பங்கேற்று 61,000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. அவர்களுக்காக பல நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருகின்றன.
அரசுத் துறைகளில் பணியாற்ற நியமன கடிதம் பெற்றுள்ள 61,000-க்கும் மேற்பட்டோரின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்த நியமன கடிதங்கள், நாட்டை மேம்படுத்துவதற்கும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை ஏற்பதற்குமான அழைப்பு கடிதங்கள். இதன் மூலம் இளைஞர்கள் பலர் நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், நிதிசேவை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி பொதுத்துறை நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்வர். நியமனமான இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வேலைவாய்ப்பு திருவிழாவை தொடங்கியதில் இருந்து இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நியமன கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மத்திய உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நிதி சேவைகள் துறை, உயர்கல்வி உட்பட பல துறைகளில் பணியாற்றுவர்’’ என கூறியுள்ளது.