பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா | கோப்புப்படம்
புதுடெல்லி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த தேசபக்தி உணர்வு கொண்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 131-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசினார்.
“நம் தேசத்தில் சமூக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபட்டவர்கள் எப்போதும் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதில் ஒருவர். மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் தலைவர். பிப்.24-ம் தேதி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. நான் தமிழகம் செல்லும் போதெல்லாம் மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை கண்டு வருகிறேன்.
அவர் தலைமையிலான அரசு தமிழகத்தில் இருந்தபோது, தாய்மார்கள், மகளிர் நலனுக்காக பல பாராட்டத்தக்க மக்கள் நல திட்டங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். சிறந்த தேசபக்தி உணர்வு கொண்டவர். இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை போற்றி பெருமைப்பட்டார். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு, உரையாடலும் இன்னும் என் மனதில் உள்ளது.
கடந்த 2002 மற்றும் 2012-ல் நான் குஜராத் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற போது, அந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்தபோது, நல்லாட்சி உட்பட பல்வேறு தலைப்புகளில் விவாதித்தது உண்டு. அவரது சிந்தனை மிக தெளிவானதாக இருக்கும். அது அவரது குறிப்பிடத்தக்க பண்பு.
பல ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் கொண்டாட்டத்தின் போது என்னை மதிய உணவுக்காக சென்னைக்கு அழைத்தார். அந்த அன்பான செயல் என்னால் என்றென்றும் மறக்க முடியாது. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.