இந்தியா

தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்கள் உருவான நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர்

மோகன் கணபதி

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட ஆறு மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு ஆறு மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.” என தெரிவித்துள்ளார். .

இதேபோல், கர்நாடகா உதயமான தினத்தை முன்னிட்டு கன்னட மொழியில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கன்னட ராஜ்யோத்சவ நன்நாளில் கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கர்நாடகம் வளமான பாரம்பரியம், குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் அளவற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த பூமியாகும். அதன் புகழ்பெற்ற பாரம்பரியமும், காலத்தால் அழியாத பழக்கவழக்கங்களும் நமது தேசத்தின் கலாச்சாரக் கட்டமைப்பை வளப்படுத்தியுள்ளன.

கர்நாடக மக்கள், தங்களின் கடின உழைப்பு, தொழில்முனைவு மற்றும் திறன்களால் தங்களை வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை முதல் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட உற்பத்தி மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் வரை, கர்நாடக மக்கள் தங்கள் திறமையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். உலகளாவிய சவால்களுக்குத் தீர்வை வழங்குவதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். இந்தச் சிறப்புமிக்க நன்நாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்.” என தெரிவித்துள்ளார்.

கேரளா உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரளத்தைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள்!

இந்தச் சிறப்புமிக்க நாள், கேரளத்தின் துடிப்பான மரபுகளையும், அதன் தனித்துவமான மன உறுதியையும் கொண்டாடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலையும், வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்ட கேரளம், நம் நாட்டின் வரலாற்றில் எப்போதும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

கேரளத்தின் மிகப்பெரிய பலம் அதன் மக்களே ஆவர். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், சிறந்து விளங்க வேண்டும் என்ற முனைப்பும் இந்தியாவைக் கடந்து, உலகெங்கிலும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளன. சுகாதாரம், கல்வி, தொழில்முனைவு, அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் கேரள மக்கள் அடைந்துள்ள சாதனைகள் நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றன.

வரப்போகும் ஆண்டுகள், கேரளத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் புதிய வாய்ப்புகளையும், கூடுதல் செழிப்பையும், தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT